பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம், வளத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால்(33). இவர் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். மேடவாக்கத்தில் நண்பர்களுடன் தங்கி, ராஜிவ் காந்தி சாலையில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று இருசக்கர வாகனத்தில், துரைப்பாக்கம் நோக்கி ரேடியல் சாலையில் சென்றார். அப்போது, பின்புறம் வந்த தண்ணீர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஒரு கார் மீது மோதியது.
இதில், கார் முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. அந்த வாகனம் கோபால் ஓட்டிச் சென்ற வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த கோபால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இருசக்கர வாகன ஓட்டியான பள்ளிக்கரணையைச் சேர்ந்த கணேசன், 34, என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து, மவுன்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான திருவாரூர் மாவட்டம், வடபாதி மங்களத்தைச் சேர்ந்த பூவரசன், 25, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment