செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட 59 ஊராட்சிகளிலிருந்தும் வருகைபுரிந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
மேலும், வீடு வழங்கும் திட்டம், கர்பிணி பெண்களுக்கான நல உதவிகள் வழங்குதல், ஊனமுற்றோருக்கான நலத்திட்டம் வழங்குதல் என பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆணைகளை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள் வழங்கினார்.
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க-வின் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாலருமான க.சுந்தர், மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் இ.ஆ.ப ஆகியோர் இந்த முகாமில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த முகாமில் வேளாண் துறை சார்பாக மின் தெளிப்பான், விதைப்பான், மரம் ஏறும் கருவி உள்ளிட்ட நவீன விவசாய கருவிகளும், மரக்கன்றுகள், விதைகள் உள்ளிட்டவைகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. பள்ளி கல்வித்துறை சார்பாக ஊனமுற்ற மாணவருக்கான சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
நிகழ்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய குழுத் தலைவர் கே.கண்ணன், ஒன்றிய குழு துணைத்தலைவர் விஜயலட்சுமி கருணாகரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில் தி.மு.க- ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் வழங்கிய பல மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும், குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் வழங்கப்பட்ட 13523 மனுக்களில் 3150 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும், மீதுமுள்ள மனுக்களில் 575 மனுக்கள் பரிசீலினையில் உள்ளன எனவும் தெரிவித்தார்.
மேலும் நீர் நிலை புறம்போக்குகளில் பட்டா கோருபவர்களின் மனு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்படும் மனுக்களும் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவத்தார்.
இந்த முகாமில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மாவட்ட கவுன்சிலர்கள் வசந்தா கோகுலக்கண்ணன், மாலதி, ஒன்றிய செயலாளர் ஜி.தம்பு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி அளவிலான பல தி.மு.க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் சுகாதார துறை உள்ளிட்ட பலதுறை அதிகாரிகளை கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது கூட்டத்தில் இருந்த நரிக்குறவர் பெண் ஒருவர் எனக்கும் நலத்திட்ட உதவிகள் தேவைப்படுகிறது என்ற கோரிக்கையை வைத்து பின்னர் மணி மாலையை அமைச்சர் உள்ளிட்ட மேடையில் அமர்ந்திருந்தவர்களுக்கு அணிவித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment