செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். 50 வயதான இவர் கூலித்தொழிலாளி ஆவார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களது மகன் பிரேம்குமார் (வயது 20) சென்னை, கிண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி. ஏ. 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி பிரேம்குமார் அதே பகுதியில் உள்ள பிரவீன்குமார் என்ற 12ம் வகுப்பு மாணவருடன் சென்னையை அடுத்த ரெட்ஹில்ஸ் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென பைக்கில் வந்த மர்மநபர்கள் பிரேம்குமாரை திடீரென தாக்கியுள்ளனர். மேலும், பிரேம்குமாரின் பைக்கையும், செல்போனையும் பறித்துக் கொண்டதுடன் அவரை கடத்தியும் சென்றுள்ளனர். இதைக் கண்டு பயத்தில் அலறியடித்துக்கொண்டே பிரேம்குமாருடன் சென்ற 12ம் வகுப்பு மாணவன் பிரவீன்குமார் வீட்டிற்கு ஓடிவந்துள்ளான்.
அங்கு தனது பெற்றோரிடமும், பிரேம்குமார் பெற்றோரிடமும் நடந்த சம்பவத்தை கூறியதுடன், பிரேம்குமாரை கடத்திச் சென்ற சம்பவத்தையும் கூறியுள்ளனர். இதனால், பிரேம்குமார் பெற்றோர்கள் பதற்றம் அடைந்துள்னர். மேலும், பிரேம்குமார் அவ்வப்போது வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி பகுதியில் உள்ள 10ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளிடம் தொலைபேசியில் பேசி வந்ததையும் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். இதனால், உடனே பிரேம்குமார் பெற்றோர்கள் அந்த மாணவிகளின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஏதும் தெரியாது என்று கூறியதால், உடனே பிரேம்குமார் பெற்றோர்கள் ஓட்டேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்னர்.
இதுதொடர்பாக, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அந்த இரு மாணவிகள், பிரேம்குமாரின் நண்பர் பிரவீன்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மாணவிகள் அளித்த தகவல்கள் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரேம்குமாருக்கும் இந்த இரு மாணவிகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரு மாணவிகளையும் செல்போனில் ஆபாசமாக படம்பிடித்த பிரேம்குமார், மாணவிகளை மிரட்டியுள்ளார். கடந்த ஒரு வருடமாக இரண்டு மாணவிகளையும் மிரட்டி ரூபாய் 1. 50 லட்சம் பணம் வரை மாணவிகளிடம் இருந்து பிரேம்குமார் பறித்துள்ளார்.
இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ரெட்ஹில்ஸ் பகுதியை அடுத்த சோழவரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற இளைஞர் பழக்கமாகியுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக அசோக்கிடம் இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவிகள், பிரேம்குமார் பற்றியும், பிரேம் மிரட்டி பணம் பறித்து வருவதையும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அசோக் மாணவிகளிடம் பிரேம்குமாரிடம் நீ கேட்ட பணத்தை தருகிறோம். ரெட்ஹில்ஸ் டோல்கேட்டிடம் வந்துவிடு என்று சொல்லுமாறு கூறியுள்ளார். பணத்தை பெறுவதற்காக பிரேம்குமாரும், பிரவீன்குமாரும் சென்றுள்ளனர். ரெட்ஹில்ஸ் சென்ற பிரேம்குமாரிடம் மாணவிகள் என்ன உடை அணிந்து வந்துள்ளீர்கள்? என்று கேட்டுள்ளனர். அதை கேட்ட மாணவிகள் அசோக்கிடம் கூறியுள்ளனர். அதன்பின்புதான் பிரேம்குமார் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
மேலும், கடத்திச் செல்லப்பட்ட பிரேம்குமாரை அசோக் உள்ளிட்ட கூலிப்படை கும்பல் 2 நாட்கள் ஒரு அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளது. பின்னர், ஆந்திரா அருகே உள்ள கும்மிடிப்பூண்டி அருகே பிரேம்குமாரை கடத்திச் சென்று ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காட்டுமேடு கிராமம் அருகே உள்ள ஏரியில் வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர், அங்கேயே பிரேம்குமாரின் உடலை புதைத்துள்ளனர்.
இந்த நிலையில், கொலை நடந்த இடத்திற்கு நேற்று மாணவிகள் இருவரையும், பிரேம்குமாரின் பெற்றோர்களையும், பிரவீன்குமாரையும் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், ஏரிக்கரையில் வெட்டி புதைக்கப்பட்ட பிரேம்குமாரின் சடலத்தை தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்தனர். பின்னர், அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 15 வயதே ஆன மாணவிகள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 10ம் வகுப்பு மாணவிகள் கூலிப்படையை ஏற்பாடு செய்து கல்லூரி மாணவரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment