அன்வர் ராஜாவை ஓபிஎஸ் கைவிட்டு விட்டாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கே.சி பழனிச்சாமி, ஓபிஎஸ் என்பவர் எப்போதுமே நீட்டிய இடத்தில் கையெழுத்து போட்டுவிடக்கூடியவர். ஊடகங்கள் கூட அவரை ஆஹா ஓஹோ வென மிக தவறான தகவல்களை சொல்லிக்கொண்டிருந்தது.
ஓபிஎஸ் இபிஎஸ்சை எதிர்க்கிறார் என்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் எடப்பாடி எங்கு கையெழுத்து போட சொல்லுகிறாரோ அந்த இடத்தில் ஓபிஎஸ் கையெழுத்து போடுவார் அவரது நிலைமை அந்த அளவிற்கு உள்ளது என அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட கே.சி பழனிச்சாமி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அதிமுக இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகின்றனர். இதற்கிடையில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்துள்ள சசிகலா அதிமுகவை கைப்பற்றியே தீருவேன் என சபதம் எடுத்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பறி கொடுத்து கவுரவமான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது அதிமுக. ஆனால் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கட்சித் தலைமையின் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் சசிகலா அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் எனக்கூறி பலரையும் கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் ஓபிஎஸ்& இபிஎஸ் தலைமை ஈடுபட்டுவருகிறது. இது ஒருபுறம் கட்சித் தொண்டர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கட்சி விதிகளை மீறியதாகவும், கண்காட்சியின் மாண்புக்கு கலங்கம் ஏற்படுத்தியதாகவும், கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயற்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஜெயலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா ஆதரவாக அன்வர்ராஜா இருந்து வந்தார். பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருந்தார். பின்னர் ஓபிஎஸ்&இபிஎஸ் ஒன்றாக இணைந்த பின்னர் கட்சி ஒற்றைத் தலைமையின் கீழ் இயங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
அதிமுக கூட்டணியில் இருந்து வரும் பாஜகவை மிக கடுமையாக விமர்சித்து வந்தார். அதிமுக தோல்விக்கு பாஜக கூட்டணிதான் காரணம் என பகிரங்கமாக கூறினார். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கருத்து தெரிவித்தும் வந்தார். ஒருகட்டத்தில் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும், அப்போதுதான் கட்சியை காப்பாற்ற முடியும் என பேசத்தொடங்கினார். இந்நிலையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஒருவகையில் அவர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் அன்வர்ராஜா நீக்கம் குறித்து பலர் பலவகைகளில் கருத்து கூறி வருகின்றனர். இந்த வரிசையில் அதிமுக முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் கே. சி பழனிச்சாமி யூடியூப் சேனல் ஓன்றுக்கு அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், அன்வர் ராஜாவை அடிக்க பாய்ந்தார். அதுதான் முக்கிய பிரச்சனையாக இருந்தது. அந்த கூட்டத்தின் இறுதியில் சிவி சண்முகம் மற்றும் அன்வர்ராஜா இருவரையும் அழைத்து பேசிய ஓபிஎஸ் இபிஎஸ் சி.வி சண்முகத்திடம் ஒரு மூத்த தலைவரை இப்படி பேசுவது கூடாது என எச்சரித்ததுடன், ஊடகங்களில் இனி பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என அன்வர் ராஜாவுக்கும் அட்வைஸ் செய்தனர். ஆனால் அதையும் மீறி அவர் தொலைக்காட்சிகளில் கூட்டத்தில் நடந்ததை பேசிவந்தார். விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்ற முடிவுக்கு அவர் வந்திருந்த நிலையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அன்வர்ராஜா நீக்கப்பட்டதில் ஓபிஎஸ் பங்கும் இருக்கிறதா.? அன்வர் ராஜாவை ஓபிஎஸ் கைவிட்டு விட்டாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கே.சி பழனிச்சாமி,
ஓபிஎஸ் என்பவர் எப்போதுமே நீட்டிய இடத்தில் கையெழுத்து போட்டுவிடக்கூடியவர். ஊடகங்கள் கூட அவரை ஆஹா ஓஹோ வென மிக தவறான தகவல்களை சொல்லிக்கொண்டிருந்தது. ஓபிஎஸ் இபிஎஸ்சை எதிர்க்கிறார் என்றனர். ஓபிஎஸ் எடப்பாடிக்கு எதிராக குரலை உயர்த்துவார் என்றும் சசிகலாவை ஆதரிப்பார் என்றெல்லாம் கூறின. ஆனால் நான் மட்டும் தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக ஓபிஎஸ்சின் நடவடிக்கைகளை அறுதியிட்டுக் கூறிக் கொண்டிருக்கிறேன்.
எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறாரோ அதைத்தான் ஓபிஎஸ் செய்வார். அவர் சொல்லும் இடத்தில் ஓபிஎஸ் கையெழுத்து போடுவார். கடைசியில் எந்த பிரச்சினையும் இல்லாமல் அவர் செட்டிலாகி விடுவார். விட்டுக் கொடுப்பதில், புரிந்து கொள்வதில் அவர்கள் இருவரும் ஒன்றுபட்டு விடுவார்கள். ஓபிஎஸ் எப்போதும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பெரிய அளவில் எந்த முடிவையும் எடுக்க மாட்டார் என அவர் கூறியுள்ளார். அதாவது ஓபிஎஸ் தன்னை நம்பி வந்தவர்களையும் கூட கைவிட்டு தப்பிக்க கூடியவர் என்ற தொனியில் அவருடைய கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment