தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரவலை தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். 70 நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவிவிட்டதை சுட்டிக்காட்டி மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழ்நாட்டிலும் நைஜீரியாவில் இருந்து திரும்பியவர் மற்றும் அவருடன் தொடர்புடைய 6 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதை ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஒமிக்ரான் பரவலை தடுக்க தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட துறையினரை பயன்படுத்தி பொது இடங்களில் பொதுமக்கள் 100 சதவீதம் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மருத்துவமனைகளில் சிகிச்சை வசதிகள், படுக்கைகள், வெண்டிலேட்டர், ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்ட விவரங்களை கண்காணித்து விவரங்களை கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ள அவர், ஒமிக்ரான் பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்புவதை தடுக்கவும், மக்களுக்கு சரியான தகவல்கள் சென்றடைய செய்யவும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உடையவர்கள் தானாக தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவ்வப்போது ஏற்படும் மாறுதல்களுக்கு உட்பட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பை தொடர கடிதத்தில் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment