எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய குறையை போக்குவதற்கான அதிரடி நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி இருக்கிறது. இதற்கான முக்கியத் தகவல்களை மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே வெளியிட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகை முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் வாகனப் புகையால் மக்கள் பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து, புகையை வெளியிடாத மாற்று எரிபொருள் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு பெரிய அளவிலான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக மின்சார வாகன விற்பனையை ஊக்குவிப்பதற்கான பல்வேறு முயற்சிகளையும்,, திட்டங்களையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது மின்சார வாகன விற்பனையில் இருக்கும் இடர்பாடுகளை களைவதற்கான அடுத்தக் கட்ட முயற்சிகளில் மத்திய அரசு நேரடியாக களமிறங்கி இருக்கிறது. அதாவது, மின்சார வாகனங்களில் இருக்கும் மிகப்பெரிய குறையாக, பேட்டரியில் சார்ஜ் ஏற்றும் நேரமும், அது எவ்வளவு தூரம் செல்வதற்கான வாய்ப்பை வழங்கும் என்பது பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்த குறையை போக்கும் வகையில் அதிவிரைவாக சார்ஜ் ஏற்றும் ஃபாஸ்ட் சார்ஜர் சாதனங்களை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில், அனைத்து வாகன நிறுவனங்களும் ஃபாஸ்ட் சார்ஜர்களை உருவாக்கி வழங்கி வந்தாலும், பெரிய அளவில் அவை பயன்பாட்டுக்கு வருவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனை மனதில் கொண்டு புனே நகரில் இயங்கி வரும் வாகனங்களை தணிக்கை செய்து சான்று வழங்கும் தன்னாட்சி அமைப்பான அராய் தற்போது ஃபாஸ்ட் சார்ஜர்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிக்காக நடந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் பேசிய மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், மின்சார வாகனங்களை பயன்படுத்தும்போது உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை களைவதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளோம். குறிப்பாக, மின்சார வாகனங்களின் பேட்டரியை அதிவிரைவாக சார்ஜ் ஏற்றுவதற்கான சாதனங்களை உருவாக்குமாறு அராய் அமைப்பிற்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஃபாஸ்ட் சார்ஜரின் புரோட்டோடைப் உருவாக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு அக்டோபரில் இந்த ஃபாஸ்ட் சார்ஜர் அறிமுகம் செய்யப்படும். டிசம்பர் முதல் பொது பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு இருக்கிறது.
நாடுமுழுவதும் 70,000 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. இதில், 22,000 பெட்ரோல் நிலையங்களில் இந்த ஃபாஸ்ட் சார்ஜர்கள் நிறுவப்படும். அதாவது, நகரங்களில் 3 கிமீ இடைவெளியில் ஒரு ஃபாஸ்ட் சார்ஜர் நிலையமும், நெடுஞ்சாலைகளில் 25 கிமீ தூரத்திற்கு ஒரு ஃபாஸ்ட் சார்ஜர் நிலையைமும் திறக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார். அராய் அமைப்பின் புதிய ஃபாஸ்ட் சார்ஜர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்போது, மின்சார வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் இனி பெட்ரோல் நிலையங்களில் மிக எளிதாக பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்யும் வாய்ப்பை பெறுவார்கள். இது நிச்சயம் மின்சார வாகனங்கள் வாங்குவோரை ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment