கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட உள்ள கடன்களுக்கான வட்டி விரைவில் குறைக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர்; கூட்டுறவு சங்கங்களில் 7 லட்சம் புதிய விவசாயிகள் உறுப்பினராக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு இதுவரை 700 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட உள்ள கடன்களுக்கான 12 % வட்டி 7 %-மாக குறைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றார்.
மேலும் பேசிய அவர் கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக வழங்கப்பட்ட தங்க நகைக் கடன் குறித்த ஆய்வு 95% முடிவடைந்துள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வரும் ஜூன் மாதத்திற்குள் 2500 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே போல கூட்டுறவு மருந்தகங்களின் எண்ணிக்கையும் ஆண்டொன்றுக்கு 60 புதிய மருந்தகங்கள் என்கிற அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் 300 புதிய கூட்டுறவு மருந்தகங்களை புதியதாக துவக்குவதற்கு கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த வருடத்தில், நிர்ணயிக்கப்பட்ட 60 என்கிற எண்ணிக்கையைவிட கூடுதலாக 75 மருந்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் துவங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
No comments:
Post a Comment