சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் உமாதேவி. கணவரை பிரிந்து தனது மகன் நவீன்குமாருடன் வசித்து வந்தார். நவீன்குமார் சமீபத்தில் திருநங்கையாக மாறி தனது பெயரை அக்ஷிதா என மாற்றிக் கொண்டார். பெங்களூர் சென்று திருநங்கைகளுடன் வாழ்ந்த அவர், கடந்த தீபாவளி பண்டிகையன்று வீடு திரும்பியுள்ளார். இதனிடையே கடந்த வாரம் சக்தி என்ற இளைஞருடன் ஏற்காடு சென்று விட்டு , நள்ளிரவு ஒன்றரை மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.
மறுநாள் காயத்துடன் , அம்மாபாளையம் காட்டுப்பகுதியில் நவீன்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு சேலம் அரசு மருத் துவமனையில் அனுமதித்தனர் . ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .
இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் . அதில், தாய் உமாதேவி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மகன் திருநங்கையாக மாறியது பிடிக்காததால், தாய் உமாதேவி தனக்குத் தெரிந்த நபர்கள் 5 பேரின் உதவியுடன் அவரை அடித்துக் கொன்றது விசாரணையில் உறுதியானது.
இதையடுத்து திருநங்கை மர்மச்சாவை கொலை வழக்காக மாற்றி , தாய் உமாதேவி , ஜாகீர்அம்மாபாளையம் மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேஷ், காமராஜ், பாரதிநகரை சேர்ந்த கார்த்திகேயன், சந்தோஷ், டால்மியாபோர்டு பகுதியை சேர்ந்த சிவக்குமார் ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நவீன்குமார் திருநங்கையாக மாறியது , தாய் உமாதேவிக்கு பிடிக்கவில்லை. மற்ற திருநங்கைகளுடன் வந்து தனது வீட்டில் குடியேறிவிடுவாரோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் தெரிந்த நபர்களிடம் தனது மகன் ஆணாகவே இருக்க என்ன செய்யலாம் என கேட்டுள்ளார். அதற்கு சிலர் திருநங்கையாக மாறும் நபர்கள் ஆணாகவே இருக்க விழுப்புரத்தில் ஹார்மோன் ஊசி போடுகிறார்கள் . அங்கு சென்று நவீன்குமாருக்கு ஹார்மோன் ஊசி போட்டால், எல்லாம் சரியாகிவிடும் எனக் கூறியுள்ளனர். அந்த தகவலை மகன் நவீன்குமாரிடம் தெரிவித்து ஹார்மோன் ஊசி போட்டுக்கொள்ள தாய் உமாதேவி அழைத்துள்ளார். ஆனால் , நான் திருநங்கையாகவே வாழ விரும்புகிறேன்.
என்னை எங்கும் அழைக்காதீர்கள் என கண்டிப்பாக கூறியுள்ளார். இதனால், தெரிந்த நபர்கள் மூலம் மகனின் கால்களை அடித்து ஒடித்துவிட்டு , அதற்கு சிகிச்சை அளிப்பது போல் விழுப்புரம் அழைத்துச் சென்று ஹார்மோன் ஊசி போட்டுவிடலாம் என தாய் திட்டமிட்டுள்ளார்.
அதன்படியே தெரிந்த நபர்களான வெங்கடேஷ் , காமராஜ் , கார்த்தி உள்ளிட்ட 5 பேரைக் கொண்டு நவீன்குமாரை அடித்து, அவரது காலை உடைக்க முற்பட்டுள்ளனர். அப்போது , வாயை பொத்தியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார். பின்னர் இறந்துவிட்டதாக கருதி , காட்டுப்பகுதியில் தூக்கிப் போட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர். திருநங்கைகளுக்கு இன்று வரை நம் சமுதாயத்தில் பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படவில்லை. ஹார்மோன் ஊசி போட மறுத்ததால் திருநங்கை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment