செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் புதுத்தெருவைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த வாரமாக காணவில்லை. இதனையடுத்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சிறுமியின் வீட்டிற்கு அருகில் வாடகை வீட்டில் வசித்து வந்த சசிகுமார் (36) என்பவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றிருப்பது தெரிய வந்தது. பின்னர், போலீசார் தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் சசிகுமாரின் சகோதரி விமலா என்பவர் திருப்போரூர் புதுத்தெருவில் வசித்து வந்ததும் அவர் அச்சிறுமியை ஆட்டோவில் கேளம்பாக்கம் அழைத்துச் சென்று சசிகுமார் வந்த காரில் ஏற்றி விட்டதும் தெரிய வந்தது.
சென்னை வடபழனியில் தனியார் விடுதி ஒன்றில் வேலை பார்த்த சசிகுமாரின் தாயார் காசியம்மாள் கொடுத்த ஆலோசனையின்படி சசிகுமார் சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்துக் கொள்வதாக உறுதி அளித்து சிறுமியுடன் அந்த தங்கும் விடுதியில் இரு நாட்கள் தங்கி இருந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரியவந்தது.
திருவண்ணாமலையை அடுத்த குந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் (36), அவரது தாயார் காசியம்மாள் (60) மற்றும் திருப்போரூர் புதுத்தெருவைச் சேர்ந்த சசிகுமாரின் சகோதரி விமலா (40) ஆகியோரை திருப்போரூர் காவல் ஆய்வாளர் லில்லி, காவல் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம் ஆகியோர் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். மேலும், சென்னை தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டு மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment