வீடியோவிற்காக பயணத்தின்போது பைக்கில் நடனமாடிய இளைஞருக்கு அதிரடியாக ரூ.9,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.
லைக்ஸிற்காகவும், வியூஸிற்காகவும் தற்கால இளம் தலைமுறையினர் புதிய புதியதாக ஏகப்பட்ட வேலைகளை செய்கின்றனர். இது பலருக்கு ஓர் போதையாகவே மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இதில் சில நிகழ்வுகள் குற்ற சம்பவங்களாகவும் சென்று முடிந்துள்ளதை பார்த்திருக்கிறோம்.
இதனாலேயே மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்களை செய்து வீடியோ பதிவிடுபவர்களை, அந்த வீடியோவை வைத்தே போலீஸார் தண்டித்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக பல சம்பவங்களை இதற்குமுன் நமது செய்திதளத்தில் பார்த்துள்ளோம். இந்த வகையில் சமீபத்தில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் பயணத்தின் போது நடனமாடிய இளைஞருக்கு கான்பூர் போலீஸார் ரூ.9,000-ஐ அபராதமாக விதித்துள்ளனர்.
இதுகுறித்து உத்திர பிரதேச மாநில போலீஸாரின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். இந்த இளைஞரின் பெயர் கலிட் அகமது ஆகும். பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சாலையில், பாடல் ஒன்றிற்கு ஏற்ப பைக்கில் அமர்ந்தவாறே தனது உடலை அசைத்தும், பைக்கில் எழுந்து நின்றவாறும் இவர் பதிவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாக துவங்கியது.
இந்த வீடியோவினை கண்ட போலீஸார் சம்மந்தப்பட்ட இளைஞரை தேடி கண்டுப்பிடித்து அவருக்கு ரூ.9,000-ஐ அபராதமாக விதித்துள்ளனர். இதனை கலிட் அகமதே தனது அடுத்த வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு இந்த சாலை விதிமுறை தெரியாது எனவும், இதற்கு தான் மன்னிப்பு கேட்பதாகவும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.
மற்ற வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் வகையில் வாகனம் ஒட்டியது மட்டுமில்லாமல், ஹெல்மெட் அணியாதது, எந்தவொரு முன்அறிவிப்புமின்றி சாலையில் பாதையை மாற்றியது என பல பிரிவுகளில் கலிட் அகமது மீது கான்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவருக்கு மொத்தமாக ரூ.9,000-ஐ அபராதமாக விதித்துள்ளனர். இந்த தொகையினை இணையம் வழியாக கலிட் அகமது செலுத்தியுள்ளார்.
இந்தியாவில் இவ்வாறு பொது சாலைகளில் ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது சட்டப்படி குற்றமாகும். ஆதலால் இத்தகைய ரீல் வீடியோக்களை பதிவு செய்ய விரும்புவோர், தங்களது சொந்த இடத்திற்கோ அல்லது தனியாருக்கு சொந்தமான இடங்களுக்கோ செல்வது நல்லது. இருப்பினும் ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது எந்த இடமாக இருந்தாலும் சரி, அது முட்டாள்தனமானதே.
பொது இடங்களில் இத்தகைய ஸ்டண்ட்களை செய்வதை முற்றிலுமாக மறந்துவிடுங்கள். ஏனெனில் இப்பொழுதெல்லாம் வீதிக்கோர் சிசிடிவி கேமிராக்கள் உள்ளன. ஆதலால் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் வீடியோ இல்லையென்றாலும், சிசிடிவி வீடியோக்கள் உங்களை காட்டி கொடுத்துவிடும். ஆதலால் எல்லா இடங்களிலும் உஷாராக இருப்பது நல்லது.
No comments:
Post a Comment