முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், 11 ராணுவ வீரர்கள் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை சூளூர் விமானப்படைத் தளத்தில் இருந்து எம்.ஐ.17வி-5 ரக ஹெலிகாப்டர் மூலம்வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரிக்கு சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி மறைவுக்கு தேசிய அளவில் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் பிபின் ராவத் ஏற்கெனவே 2015 ஆம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் தற்போது பலரால் நினைவுகூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவர் லெப்டினென்ட் ஜெனரலாக பணியாற்றி வந்தார். கடந்த 2015 பிப்ரவரி 3 ஆம் தேதி பிபின் ராவத் உள்பட 3 ராணுவ உயரதிகாரிகள் நாகாலாந்து மாநிலம் திமாபூரில் உள்ள விமானப்படைத் தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.
அந்த ஹெலிகாப்டர் தரையில் இருந்து சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் பறந்த போது, திடீரென எஞ்சின் செயல்பாடு நின்று போனது. இதனால் ஹெலிகாப்டர் வேகமாக தரையில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் அதில் இருந்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவாமாக உயிர் தப்பினர். இந்த விபத்து நடந்து சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகி அதில் இருந்த 13 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment