பசு மாட்டிற்கு பல வித நோய்களால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு இடத்தில் ஒரு விநோதமான காரணத்திற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள்.
அது என்ன காரணம்? எதற்காக நன்றாக இருக்கும் பசுவிற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்?
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் ஶ்ரீகாந்த் ஹெக்டே என்பவரின் குடும்பம் வசித்து வந்துள்ளது. இந்த குடும்பம் பசு மாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளது. இவர்களின் குடும்ப வழக்கத்தின்படி பண்டிகை நாட்களில் பசுவை வணங்கி வந்துள்ளனர். அந்த சமயம் பசுவிற்கு தங்க சங்கிலி, பூ மாலை ஆகியவற்றை அணிந்து வணங்குவார்கள்.
அந்த வகையில் கடந்த மாதம் தீபாவளி அன்று வழக்கம் பசுவிற்கு 20 கிராம் தங்க சங்கிலியை வைத்து வணங்கியுள்ளனர். பூஜை முடிந்த பிறகு அந்த தங்க சங்கிலியை பசுவின் கழுத்திலிருந்து எடுத்து வைத்துள்ளனர்.
அவர்கள் சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது அந்த தங்க சங்கிலி அங்கு இல்லாமல் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த சங்கிலியை வீடு முழுவதும் தேடியுள்ளனர். வீட்டில் எங்கு தேடியும் கிடைக்காததால் அவர்களுக்கு பசுவின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை பசு அந்த தங்க சங்கிலியை விழுங்கியிருக்க கூடும் என்று நினைத்துள்ளனர். அவர்கள் நினைத்து போல் அந்த சங்கிலியை பசு தான் விழுங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
அதன்பின்னர் சுமார் 30-35 நாட்கள் வரை பசுவின் சாணத்தில் தங்க சங்கிலி வருகிறதா என்று அவர்கள் ஆவலுடன் காத்திருந்துள்ளனர். இத்தனை நாள் ஆகியும் சாணத்தில் சங்கிலி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து பசுவை கால்நடை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். அவர் சோதனை செய்து பார்த்ததில் பசுவின் வயிற்றில் தங்க சங்கிலி சிக்கியிருந்தது உறுதியானது.
குடும்பத்தினரின் ஒப்புதலுடன் பசுவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையில் தங்க சங்கிலி வெளியே எடுக்கப்பட்டது. ஆனால் சங்கிலி எடுத்த பிறகும் அந்த குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 20 கிராம் எடையில் இருந்த சங்கிலி தற்போது வெறும் 18 கிராம் எடையுடன் மட்டுமே இருந்தது. தங்க சங்கிலியின் ஒரு சிறிய பகுதியை காணவில்லை. இது அந்த குடும்பத்திற்கு சற்று அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது.
No comments:
Post a Comment