சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறையின் அங்கமான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் மூலம் புதிதாக ரூ90.74 கோடியில் கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகளை சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகில் நடந்த விழாவில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் க.சுந்தர், வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட குழு தலைவர்கள் செம்பருத்தி, மனோகரன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் கருணாகரன், மாவட்ட கவுன்சிலர் பூங்கோதை ராஜன், திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கார்த்திக், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் ஆப்பூர் சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், 'கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரூ90.74 கோடியில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணி 30 மாத காலத்திற்குள் நிறைவடையும்.
இந்த ரயில்வே மேம்பாலப்பணி நிறைவுற்றவுடன், ஒரகடம் தொழிற்பேட்டை ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் வாகனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என்றார்.
கூடுவாஞ்சேரி மற்றும் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே சாலை மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2006-07ல் எடுக்கப்பட்டன. இதற்கு, அரசு ரூ52.80 கோடி ஒப்புதல் வழங்கி கடந்த 2011 பிப்ரவரி 28ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பக்கமுள்ள பாலப்பகுதி மட்டும் கடந்த 2013 ஆகஸ்ட் 28ம் தேதி முடிக்கப்பட்டது.
இப்பணிக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து தடையில்லா சான்று கிடைக்கப்பெறவில்லை. இதனால் பாலம் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், மாமல்லபுரம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை சென்னை எல்லை சாலை அமைக்கும் பணி அறிவிக்கப்பட்டதால், இத்திட்டத்துடன் கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியையும் இணைக்க உயர்மட்ட குழுவால் முடிவு செய்யப்பட்டு, பாலப்பணியில் அதற்குரிய டிசைன்கள் மாற்றப்பட்டன. இதற்கு, கடந்த 2016 ஜூன் 3ம் தேதி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டது.
இதன் திட்டமதிப்பீடு ரூ138 கோடி என்கிற நிலையில், ரூ90.74 கோடி மதிப்பிலான இப்பால பணிக்கு கடந்த ஜூன் 10ம் தேதி டெண்டர் கோரப்பட்டது. கடந்த அக்டோபர் 29ம் தேதி மதுரையை சேர்ந்த ஆர்ஆர் இன்ப்ரா கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்கிற ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டன. இந்த பாலம் 740 மீ நீளம், 7.50 மீ அகலத்தில் அமைக்கப்படுகிறது. இந்த பாலப்பணிகளை 30 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சாலை வழியாக சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட்டை கடந்து தான் பெரும்புதூர், பாலூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இந்த ரயில்வே கேட் ஒரு நாளைக்கு 30 முறைக்கு மேல் மூடப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க சிங்கப்பெருமாள் கோவில்-கூடுவாஞ்சேரி ரயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது. சிப்காட் தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்கள் மூலம் சரக்குகளை ஏற்றி செல்வது எளிதாகும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment