சென்னையின் புறநகர் பகுதியான வேளச்சேரி ஒரு காலத்தில் முழுக்க, ஏரியாக இருந்த பகுதி , என்பதற்கான வரைபட தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றிவருகிறது.
ஒரு காலத்தில் கிராமமாக இருந்த பகுதிதான் சென்னை. அப்போது இங்கு நிறைய ஏரிகளும், குளங்களும் இருந்தன. ஆனால், சென்னை ஒரு பெரிய நகரமாக மாறிய பிறகு அந்த ஏரிகள் வேகமாக பட்டா போடப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாற்றம் செய்யப்பட்டன.
தற்போது சென்னை அதன் முழு கொள்ளளவை தாண்டி இரண்டு மடங்கு மக்கள் தொகையுடன் விழிபிதுங்கி நிற்கிறது.
வீடுகளுக்குள் தண்ணீர்
இப்போது மழை வரும்போது ஏரிகள் இருந்த பகுதிகளில் வெள்ளநீர் செல்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிட்டது என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் சொல்கிறார்கள் . இதுதான் தொடர்கதையாக நடந்து வருகிறது. சென்னை நகரப் பகுதிக்குள் உள்ள மேற்கு மாம்பலம் பகுதியில் லேக் வியூ சாலை இன்னமும் கூட இருக்கிறது. ஆனால் ஏறி எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.
கொளத்தூர் ஏரி குட்டையானது
இப்படித்தான் கொளத்தூர் பகுதியில் இருந்த ஏரி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குட்டை போல தற்போது, மாறிவிட்டது. இது ஒரு பக்கம் என்றால் வேளச்சேரி ஏரி என்று 1980ஆம் ஆண்டு சென்னை வரைபடத்தில் இருந்த பகுதியில் தற்போது முழுக்க முழுக்க கட்டிடங்களாக காணப்படுகிறது. 1996 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வேளச்சேரி ஏரி முக்கால்வாசிக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஏரியின் ஒரு சில பகுதிகள் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. வேளச்சேரி இப்போது வெள்ளத்தில் மிதக்கும் சந்தர்ப்பத்தில் இந்த புகைப்படம் வைரலாக சுற்றி வருகிறது.
பள்ளிக்கரணை செல்ல வேண்டும்
அந்த காலத்தில், வேளச்சேரி ஏரியில் உள்ள தண்ணீரானது இந்த விளைநிலங்கள் வழியாக பாய்ந்து சென்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு சென்று அங்கிருந்து ஒத்தியம்பேட்டை வழியாக கடலில் கலக்கும். இது தான் இயல்பாக இருந்துள்ளது. ஆனால் தற்போதைய காலத்தில் விளை நிலங்கள் அனைத்தும் குடியிருப்புகளாக மாறிவிட்டதால், மழைகாலத்தில் அங்கு மழைநீர் தேங்கி வெள்ளக் காடாக மாறுகிறது.
வேளச்சேரி மக்கள்
2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது வேளச்சேரி பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் சென்ற மழைநீரால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் அனைத்தும் மூழ்கின. எனவே, அதன்பிறகு, சென்னையில் எப்போது கன மழை பெய்தாலும், வேளச்சேரி பகுதி மக்கள், வேளச்சேரி பாலத்தின் ஓரத்தில் வரிசையாக தங்களுடைய நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இப்போதும் அதைத்தான் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment