தமிழக முதலமைச்சர் அவர்களின் காணொளி ஆய்வுக் கூட்டத்தின் அறிவுறுத்தலின்படி, நீர்நிலை புறம்போக்கு ஏரி, ஏரிக்கரை, குளம், குட்டை, நீர்பிடி, ஓடை, ஊரணி, கால்வாய், ஏந்தல், ஆறு, தாங்கல், வாய்க்கால், கிணறு மற்றும் இதர நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் புதியதாக ஏதேனும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு கண்காணிக்கவும், புதிய ஆக்கிரமிப்புகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அதனை தடுத்து நிறுத்தவும் உடனடியாக வட்டாட்சியர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த கிராம அளவில் ஆக்கிரமிப்பு கண்காணிப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அக்குழுவில் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் அல்லது தொடர்புடைய உள்ளாட்சி அலுவலர்கள் பாசன உதவியாளர், நீர்வள ஆதாரத்துறை, சமூக ஆர்வலர் / தன்னார்வலர்கள் / முதல்நிலை பொறுப்பாளர்கள் ஆகியோரை வட்டாட்சியரால் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இக்குழுவானது நீர்நிலை புறம்போக்குகளில் புதியதாக ஏதேனும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு கண்காணிப்பது, புதிய ஆக்கிரமிப்புகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அதனை தடுத்து நிறுத்துவது மற்றும் இவ்விவரத்தினை உடனடியாக வட்டாட்சியர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுக்கு தெரிவிப்பது போன்ற பணிகளை மேற்கொள்வர்.
மேற்படி கிராம அளவிலான ஆக்கிரமிப்பு கண்காணிப்புக்குழு மேற்கொள்ளும் பணிகளை கண்காணிக்க அந்தந்த வட்டாட்சியர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை). காவல் ஆய்வாளர் ஆகியோர்களை கொண்டு வட்ட அளவில் கண்காணிப்புக் குழு நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும். பொதுமக்கள் நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் புதிய ஆக்கிரமிப்பு ஏதேனும் கண்டறியப்பட்டால் காஞ்சிபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
தொலைபேசி எண்.: 04427237107 , 0442723 7207
கைபேசி எண்: 93454 40662
No comments:
Post a Comment