வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத்தாழ்வு மண்டலத்தால் நேற்று முன்தினத்தில் இருந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் ஏரிகள் வேகமாக நிரம்பி கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளில் பாலாறு உப வடி நில கோட்டத்தின் கீழ் உள்ள 1022 ஏரிகளில் 941 ஏரிகள் நிரம்பி வழிகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 355 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதில், 25 ஏரிகள் 70 சதவீதத்திற்கு அதிகமாக நிரம்பியுள்ளன. இதுபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 519 ஏரிகள் நிரம்பி வழிகிறது. 9 ஏரிகள் 70 சதவீதத்திற்கும் அதிகமாக நிரம்பியுள்ளன. பாலாறு மற்றும் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தடுப்பணைகளான மாகரல், திருமுக்கூடல் ஆகிய தடுப்பணைகள் நிரம்பி நீர்வீழ்ச்சிபோல் உபரிநீர் வெளியேறுகிறது.
திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் நிரம்பி வழியும் ஏரிகள்
திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற கன மழை காரணமாக திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் யூனியன் கட்டுப்பாட்டிலுள்ள 293 ஏரி மற்றும் குளங்கள் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள 97 ஏரிகளும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதில், உடையும் தருவாயில் இருந்த பல்வேறு ஏரிகளின் கரைகள் உடையாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண் மூட்டைகள் கட்டிப்போட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பாலாற்றில் இதுவரை இல்லாத அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வல்லிபுரம் பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் ஊராட்சிக்கு குடிநீர் வழங்க பாலாற்றில் போடப்பட்டிருந்த மோட்டார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால், ஊராட்சிக்கு குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய பல்வேறு பகுதிகளில் புதிய போர்கள் அமைத்து குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். திருக்கழுக்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment