பாம்பின் வாயில் சிக்கிய தவளையை போல் பாஜகவிடம் அதிமுக சிக்கிக் கொண்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், சாதிய ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
ஆணவ படுகொலை
ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை கொண்டு வர ஏற்கனவே இருந்த காங்கிரஸ் அரசும் சரி, இப்போது உள்ள பாஜக அரசும் சரி எந்த முனைப்பையும் காட்டவில்லை என திருமாவளவன் வேதனை தெரிவித்தார். நாடு முழுவதும் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் காட்டுமிராண்டிதனமாக நடத்தப்படுகிற ஆணவ படுகொலைகளை தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருப்பதாக சுட்டிக்காட்டினார். ஆணவ படுகொலைக்கு எதிராக மத்திய அரசு சட்டம் கொண்டு வராதது தனக்கு அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சாதி மறுப்புத் திருமணம்
இவர்கள் விரும்பினால் ஒரு சட்டம் கொண்டுவருவார்கள் விரும்பாவிட்டால் ஒரு சட்டத்தை நீக்குவார்கள் என மத்திய பாஜக அரசை விமர்சித்த அவர், தமிழகத்தில் நாடக அரசியல் செய்யும் கும்பல் என பாமகவை சூசகமாக சாடினார். ஜாதிமறுப்புத் திருமணங்கள் இன்று உருவானது அல்ல என்றும் திருமாவளவன் வந்த பிறகு தான் ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக நாடக அரசியல் செய்யும் கும்பல் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவித்தார்.
உதவி செய்வது போல்
திருவிழாக்களுக்கு உதவி செய்வது போலவும், சாமி சிலைகளை வாங்கிக் கொடுப்பது போலவும் உதவி செய்து தமிழகத்தில் இன்று கிராமங்கள் தோறும் சங்பரிவார்கள் ஊடுருவி வருவதாக திருமாவளவன் தெரிவித்தார். கிராமம் கிராமமாக சென்று தன்னார்வலர்கள் என்ற பெயரில் சங் பரிவார்கள் நச்சு அரசியலை விதைப்பதாகவும் தமிழகத்தை அவர்கள் குறிவைத்துவிட்டார்கள் எனவும் கூறினார். இதனால் பாதிக்கப்படப் போவது நம் வீட்டு பிள்ளைகள் தானே என்ற புரிதல் கூட இல்லாமல் சிலர் செயல்படுவதாக வேதனை தெரிவித்தார்.
பாஜக தந்திரம்
தமிழக கிராமங்களில் சாதி வெறியர்களின் படம் போட்ட பனியன்களை கொடுத்து பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைத்து வருவதாகவும் இதனை பார்க்கும் போது தனக்கு மிகுந்த வேதனையாக இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், கூட்டணிக் கட்சிகளை பலமிழக்கச் செய்வது தான் பாஜகவின் தந்திரம் என்றும் அப்படித்தான் இன்று அதிமுக விவகாரத்தில் நடந்துகொண்டிருப்பதாகவும் திருமாவளவன் சாடினார்.
No comments:
Post a Comment