ராஜஸ்தான் மாநிலத்தில் புளூடூத் இயர்போனை சார்ஜிங் செய்து கொண்டே பேசிய நபர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 வயதான ராகேஷ் நகர், இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் உதய்புரியா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தன்னுடைய நண்பர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது ப்ளூடூத் இயர்போன் சாதனத்தைப் பயன்படுத்தி உள்ளார்.
இந்த புளூடூத் இயர்போனை அவர் சார்ஜிங் செய்து கொண்டே தன்னுடைய நண்பனிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அவர் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென அந்த புளூடூத் சாதனம் வெடித்து சிதறி இருக்கிறது.
இந்நிலையில் அந்த புளூடூத் இயர் போன் வெடித்துச் சிதறியதில் அவர், எந்த ஒரு சுய நினைவுமின்றி உடனடியாக மயங்கி கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவத்தால் அவருக்கு இரண்டு காதுகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சோமு நகரின் உதய்புரியா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ராகேஷ் குமார் நகர் அவரது இல்லத்தில் போட்டித் தேர்வுக்குத் தயாரானபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இச்சம்பவம் குறித்து சித்திநாயக் மருத்துவமனையின் மருத்துவர் எல்.எம்.சுந்த்லா கூறுகையில் "புளூடூத் இயர் போன் சாதனம் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்து அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து இருக்கிறார்.. கீழே விழுந்த அவருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம்..
பிறகு அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். என்னுடைய பணி அனுபவத்தில் இது, போன்ற சம்பவம் இதுவே முதல் முறையாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். காவல்துறையினரின் கூற்றுப்படி, ராகேஷ் இந்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் செய்து கொண்டார் மற்றும் உடன்பிறந்தவர்களில் இவர் தான் மூத்தவர் என்று கூறினர்.
வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப காலத்தில் அனைவருக்கும் அனைத்தும் எளிதாக மாறிவிடுகிறது.. அந்த வகையில் தற்பொழுது வாகனம் ஓட்டுபவர்கள் முதல் வீட்டில் அமர்ந்து கொண்டு செல்போன் மூலம் பாடல்கள் கேட்கும் நபர்கள் வரை, அனைவரும் இந்த புளூடூத் இயர்போன் சாதனத்தை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த புளூடூத் இயர் போன் வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
No comments:
Post a Comment