தமிழக கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடனை தள்ளுபடி செய்வது தொடர்பாக கூட்டுறவுத்துறை மூலம் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
2021 தமிழக சட்டப் பேரவை தேர்தலின்போது, திமுக ஆட்சி அமைந்தால் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்டுள்ள நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த நிலையில் கரோனா 2-ம் அலை தீவிரமடைந்ததால் அதை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய பொறுப்பு அரசின் முன் நின்றது. அரசு செயல்பாடுகளால் தொற்று பரவல் ஓரளவு கட்டுப்பட்டபோது, தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசியல் கட்சிகளிடம் மட்டுமன்றி வாக்காளர்களிடம் இருந்தும் கிளம்பத் தொடங்கின.
இதற்கிடையில் அரசின் நிதிநிலைமை மிக நெருக்கடியான சூழலில் இருந்ததால் நகைக் கடன் தள்ளுபடியை செயல்படுத்த முடியுமா என்ற குழப்பம் அரசு தரப்பில் காணப்பட்டது. ஆனாலும், எதிர்க்கட்சிகளின் நெருக்கடி, வாக்காளர்கள் சமூக ஊடகங்களில் இடும் பதிவுகள் ஆகியவை ஆளும் அரசு மீது எதிர்மறை எண்ணம் உருவாகும் சூழலை ஏற்படுத்தியது.
எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி நகைக்கடனை தள்ளுபடி செய்வது என்ற உறுதியான முடிவை தற்போது தமிழக அரசு எடுத்துள்ளது. அதேநேரம், நகைக் கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை சில விதிகளின் அடிப்படையில் கணிசமாக குறைப்பது எனவும் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியது:
பல்வேறு சூழல்களுக்கு இடையில் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகம் முழுக்க கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றில் நகைக் கடன் பெற்றவர்களின் பட்டியலை விரைந்து சேகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இப்பணிகள் கடந்த 4-ம் தேதி முதல் தமிழகம் முழுக்க தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5 பவுன் வரை நகைக் கடன் பெற்றவர்கள் தள்ளுபடி பெறுவர். கடன் அடமானமாக வைக்கப்பட்ட நகை 5 பவுனுக்கும் அதிகமான எடை கொண்டதாக இருந்தாலும், 5 பவுன் எடைக்கான கடன் தொகை மட்டுமே பெற்றிருந்தால் அவர்களும் தள்ளுபடி பெறுவர். 5 பவுனுக்கும் அதிகமான நகையின் பேரில் பெற்ற கடன் தள்ளுபடி தொடர்பாக அரசே இறுதி முடிவெடுக்கும்.
மேலும், நகைக் கடன் பெற்றவரோ, அவரது வாழ்க்கைத் துணையோ அல்லது தாய், தந்தையோ அல்லது மகன், மருமகளோ அரசுப் பணிகளில் இருந்தால் அவர்கள் பெற்ற நகைக் கடனை தள்ளுபடி பட்டியலுக்குள் கொண்டு வரும் திட்டம் அரசுக்கு இல்லை. மேலும், தள்ளுபடி என்பதை இலக்காக வைத்து முறைகேடாக யாரேனும் நகைக் கடன் பெற்றிருந்தாலும் அவர்களும் தள்ளுபடி பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறான இனங்களின் கீழ் நகைக் கடன் பெற்றவர்களின் பட்டியல்களை விரைந்து தயார் செய்து அரசுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இப்பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்திலோ அல்லது அதற்கு முன்பாகவோ அரசு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.
இவ்வாறு கூறினர்.
No comments:
Post a Comment