திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான 81 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் சொத்துகளை கண்டறிந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது.
மேலும், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் ஆய்வு செய்கின்றனர். இதையொட்டி கடந்த 29ம் தேதி திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஆய்வு செய்தனர்.
அப்போது துறை சார்பில் நடக்கும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த ஆய்வில் மொத்தமுள்ள 647 ஏக்கரில் சுமார் 50 ஏக்கர் நிலம் தனியார் கட்டுப்பாட்டில் இருப்பதும், அதற்கு கோயில் பெயரில் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து அந்த நிலத்தை மீட்டு கோயில் பெயரில் சுவாதீனம் செய்ய அமைச்சர், ஆணையர் ஆகியோர் கந்தசாமி கோயில் செயல் அலுவலருக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து நேற்று கோயில் நிலங்கள் கண்டறியும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக புல எண்கள் 6, 10, 21, 40, 131, 183 ஆகிய புல எண்களில் அடங்கிய 16 ஏக்கர் 23 சென்ட் நிலங்களில் தனியார் விவசாயம் செய்வது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நிலங்களை செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில் கல் நடப்பட்டு கோயில் சொத்து என பெயர் பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 81.15 கோடி என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment