12-ம் வகுப்பு மாணவர்கள் பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று 41 மத்திய பல்கலைகழகங்கள் அறிவித்துள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக பல்கலைகழகங்களில் சேரும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும், அவர்களுக்கு பல்கலைகழக நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று 41 மத்திய பல்கலைக்கழகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு்ள்ளது.
மேலும் மத்திய பல்கலைக்கழகங்களின் இந்த பொது நுழைவுத் தேர்வை (CUCET) நடத்துவதற்கான திட்டம் உடனடியாக இறுதி செய்யப்பட்டு, இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு இந்த மாத இறுதியில் கல்வி அமைச்சகம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கபடும் நிலையில், இந்த திட்டம் தொடர்பான பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட ஏழுபேர் கொண்ட யுஜிசி உறுப்பினர்கள் குழு கடந்த, 2020 டிசம்பரில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில், இளங்கலை, முதுகலை மற்றும் பி.எச்.டி., சேர்க்கைக்கான “உயர்தர திறனாய்வு சோதனை” க்கான முறைகளை பரிந்துரைத்தது.
இதன்படி ஜூன் மாத இறுதிக்குள் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான முதல் பொதுவான நுழைவுத் தேர்வு நடைபெறும் என்றும், வரவிருக்கும் கல்வியாண்டில் இருந்து மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து பட்டபடிப்பு சேர்க்கைக்கு மத்திய பல்கலைக்கழகங்களின் பொது நுழைவுத் தேர்வு (CUCET) அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும், பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறையாவது நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. இதில் இந்த ஆண்டு பொதுவான நுழைவுத்தேர்வு இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு மட்டுமே இருக்கும் என்றும், இந்த தேர்வு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என்றும் அமைச்சின் உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
மேலும் சென்ரல் யூனிவர்சிட்டி காமன் என்ரன்ஸ் டெஸ்ட் (CUCET) என்பது புதிய தேசிய கல்வி கொள்கை 2020 -ன் ஒரு பகுதியாகும். இது தேசிய சோதனை நிறுவனம் (என்.டி.ஏ) நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை எளிதாக்கும் என்று கூறுகிறது.
மேலும் இந்நிறுவனம் அமெரிக்காவில் SAT தேர்வு போன்ற உயர்தர பொது திறனாய்வு டெஸ்ட் நடத்துவதற்கு இந்த நிறுவனம் பணிபுரிகிறது. இந்த தேர்வு மூலம் மாணவர்கள், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல மத்திய பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க உதவும் என்று குழுவின் அறிக்கை கூறியுள்ளது.
மேலும் முதல் CUCET ஜூன் மாத இறுதியில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்வு முடிவு ஜூலை மாதத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரிந்துரை குழுவின் உறுப்பினர்கள் கூறுகையில், CUCET இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும்: இதில் பிரிவு A என்பது வாசிப்பு புரிதல், வாய்மொழி திறன், அளவு பகுத்தறிவு, பகுப்பாய்வு பகுத்தறிவு, பொது விழிப்புணர்வு மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான 50 கேள்விகளின் திறனாய்வு சோதனையாக இருக்கும். தொடர்ந்து பிரிவு B இல் 50 டொமைன் சார்ந்த கேள்விகள் இருக்கும்.
இதில் கணினி அடிப்படையிலான இருமொழி (இந்தி மற்றும் ஆங்கிலம்) தேர்வு மூன்று மணி நேரம் நீடிக்கும். இந்த CUCET தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற வேண்டும். இருப்பினும், ஒட்டுமொத்த மதிப்பெண்ணைப் பயன்படுத்துவதா அல்லது பகுதி A மற்றும் பகுதி B க்கு வெவ்வேறு வெயிட்டேஜ் கொடுப்பதா என்பதை பல்கலைக்கழகங்கள் தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment