செங்கல்பட்டு மாவட்டம் ,மதுராந்தகம் உட்கோட்டம் அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் கிராம காவல் கண்காணிப்பு குழு (Village Level Police Vigilance Officer Team) தொடக்க விழா கடந்த 07.01.2021 அன்று நடைபெற்றது.
பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையேயுள்ள நல்லுறவை மேம்படுத்தும் முயற்சியாக கிராம காவல் கண்காணிப்புக் குழு உருவாக்குவதற்கான வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளை தமிழக காவல்துறை சுற்றறிக்கை மூலமாக அனைத்து காவல்நிலையத்திற்கும் கடந்த வாரம் அனுப்பியது.
அதன்படி கடந்த 07.01.2021 அன்று அச்சிறுபாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் தமிழக காவல்துறையின் சிறப்பு தலைமை இயக்குனர் ராஜேஷ் தாஸ் ஐபிஎஸ் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி ஐபிஎஸ், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், மதுராந்தகம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் கவினா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக காவல்துறையின் சிறப்பு தலைமை இயக்குனர், கிராம காவல் கண்காணிப்பு குழு மூலமாக கிராம பகுதிகளில் நிகழும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களை உடனடியாக களைவதற்கு இந்த குழுவின் செயல்பாடுகள் உதவும் எனவும், சிறுசிறு சச்சரவுகள்,குடும்ப பிரச்சனைகள் போன்றவற்றிற்கு நேரடியான புகார் நடைமுறைகள் ஏதும் இல்லாமல் உடனடியாக காவல்துறையினரை அணுகி உரிய தீர்வை பெற்றுக் கொள்வதற்கும், பொதுமக்களுக்கு சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு அளிப்பதற்காகவும் மேலும் இந்த செயல்பாட்டின் மூலமாக பொதுமக்களுடனான நல்லுறவை காவல்துறை மேலும் மேம்படுத்திக் கொள்ளும் என்ற உறுதியையும் அளித்து, இதன் நோக்கம் பற்றி விரிவாக எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
மேலும், ஒவ்வொரு கிராமத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ள காவலர்களை கிராம மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். இறுதியாக அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் நன்றியுரை வழங்கினார்.
பின்னர், அச்சிறுபாக்கம் மற்றும் ஒரத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 86 கிராமங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு தங்களது பகுதிக்கு நியமனம் செய்யப்பட்ட காவலர்களை அறிமுகம் செய்து கிராம காவல் கண்காணிப்பு குழுவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு கிராமத்திற்கும் நியமிக்கப்பட்ட காவலரின் கைப்பேசி எண் மற்றும் அவரது புகைப்படம் அடங்கிய பதாகைகள் மூலமாக காவலர்களை அறிமுகம் செய்தனர். மேலும், கிராம முக்கியஸ்தர்கள் அடங்கிய வாட்ஸ்-ஆப் குழு மூலமாகவும் இந்த திட்டம் தொடர உள்ளதாக எடுத்துரைக்கப்பட்டது. காவல் துறையின் இந்த திட்டமானது பெரிதும் உதவும் எனவும், மக்களுடன் ஒற்றுமை ஏற்பட இது ஒரு சிறந்த வழி எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment