செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட எலப்பாக்கம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் (Solid Waste Management System – SWM) மூலமாக குப்பைகளை தூய்மை காவலர்கள் சேகரிக்கின்றனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி எலப்பாக்கம் வருவாய் கிராமத்தில் 2192 குடும்பங்களும், பின்னப்பூண்டி வருவாய் கிராமத்தில் 286 குடும்பங்களும் என மொத்தம் 2478 குடும்பங்கள் இருந்தன.
ஆனால் தற்போது அதன் விகிதம் அதிகமாகியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரிக்கும் திட்டமானது அதிக மக்கள் தொகை கொண்ட கிராம ஊராட்சிகளுக்கு முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்து செயல்முறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் எலப்பாக்கம் கிராம ஊராட்சியிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 300 குடும்பங்களுக்கு 1 டிரைசைக்கிள் வழங்கப்படும். இந்த திட்டதிற்காக டிரை சைக்கிள் வழங்கப்பட்டு குப்பைகளை தூய்மை காவலர்கள் நல்ல முறையிலேயே சேகரித்துவந்தனர். ஆனால் அந்த குப்பைகளை எலப்பாக்கம் சுடுகாட்டிற்கு அருகிலேயே கொட்டிவிடுகின்றனர். சில சமயங்களில் முறையற்ற செயலாக அதனை தீயிட்டும் கொளுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மூச்சுத் திணறல் மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
எனவே, அந்த இடத்தில் குப்பையை கொட்டக்கூடாது என அப்பகுதி மக்கள் ஊராட்சி செயலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், குப்பைகளை ஒருநாளும் தரம் பிரிப்பதில்லை எனவும் தெரியவருகிறது. ஆனால் பல இலட்சம் மதிப்பீடு செலவு செய்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரிக்க குழி அமைத்து அதற்கு மேற்கூரையை அமைத்தாக அரசு அறிக்கை கூறுகிறது. ஆனால் அந்த திட்டம் பற்றி இந்த தூய்மை காவலர்களுக்கு எந்த அதிகாரியும் எடுத்து கூறவில்லையா என தெரியவில்லை. இச்செய்தியில் உள்ள புகைப்படத்தினை பார்த்தால் அனைவருக்கும் புரியும்.
இப்படி அரசு திட்டமே செயல்பாடின்றி குப்பையாக உள்ளது எனவும், உரிய புறம்போக்கு நிலத்தினை தேர்வு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு குப்பையை முறையாக தரம் பிரித்து கொட்ட வேண்டும் எனவும் கடந்த வாரம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர், இத்திட்டம் முழுமையாக முடங்கி எலப்பாக்கம், பின்னப்பூண்டி ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிக்கப்படாமல் ஊராட்சியே குப்பைத் தொட்டியாக மாறியுள்ளது.
அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் பல இடங்கள் திடீரென பட்டா நிலமாக மாறிவரும் நிலையில் குப்பையை கொட்டுவதற்கு புறம்போக்கு நிலம் எங்கு உள்ளது என்பதனை நீங்களே தேர்வு செய்து தாருங்கள் என பொதுமக்களிடமே அதிகாரிகள் கோரியது மிகவும் வியப்பில் ஆழ்த்துகிறது.
மேலும், 10 ஆண்டிற்கு முன்னர் சாலைக்கு அருகே புதைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் 3 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கூறப்படும் நிலையில் அதன்பிறகு இருமுறை சாலை போடப்பட்டு சாலையின் உயரம் அதிகமான பின்னரும் ½ அடி ஆழத்திலேயே புதைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
இதனால் கனரக வாகனங்கள் அதிக பாரத்துடன் சாலையில் செல்லும்போது மாதத்திற்கு இரு முறை ஆங்காங்கே குழாய்கள் சேதமடைகிறது. மேலும் குடிநீரில் மண் மற்றும் மாசு கலந்து பொதுமக்களுக்கு நச்சுடன் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்த சாலையை பாருங்கள், சுமார் 12 ஆண்டிற்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த சிமெண்ட் சாலையானது மீண்டும் புதுப்பிக்கப்படாமல் நாற்று நடும் நிலையில் உள்ளது. இதுகுறிந்து கடந்த 2019-ம் ஆண்டே பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் 2021-ம் ஆண்டு வரை சாலை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மழைகாலங்களில் பால் சொசைட்டிக்கு செல்வதற்கே கடுமையாக துயரப்படுகின்றனர். காலில் சேற்றுப் புண் மற்றும் கொசுத் தொல்லை என அனைத்து வியாதிகளும் உருவாகும் இடமாக இந்த தெரு மாறியுள்ளது.
பல அரசு ஊழியர்களையும், அரசியல்வாதிகளையும், உயர்நிலை அதிகரிகளையும், இஸ்ரோ விஞ்ஞானிகளையும் உருவாக்கிய இந்த கிராமம் தற்போது சரியான தரமான அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் முழுமையாக மாசடைந்துள்ளது. அரசின் கண்கள் திறக்குமா..? உரிய அரசு பணியாளரை நியமனம் செய்து இந்த ஊராட்சியை பாதுகாக்குமா..? என்பதே மக்களின் ஏக்கமாகவும், கோரிக்கையுமாகவும் உள்ளது.
No comments:
Post a Comment