செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் சுங்கச் சாவடியில் விதிமுறைகளை மீறிய 170 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.80 லட்சம் அபராதம் வசூலீக்கப்பட்டது. செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர், போக்குவரத்து ஆய்வாளர்கள் கார்த்திக், விஜயா, ஆனந்த் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் செங்கல்பட்டு சுங்கச்சாவடி பகுதியில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றிவந்தது, ஷேர்ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றி வந்தது, வாகன முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் வந்தது, சொகுசு கார், சரக்கு வாகனங்களில் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தி இருந்தது என 170 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ”செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், கூடுவாஞ்சேரி, செய்யூர், அச்சரப்பாக்கம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வாகன தணிக்கை செய்யப்படும்.
எக்ஸ்ட்ரா பம்பர்கள் பொருத்தப்பட்டு இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை கழற்றப்படும். அபராதமும் விதிக்கப்படும். எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்துவதால் விபத்து நேரத்தில் வாகனங்களில் உள்ள சென்சார் வேலை செய்யாமல் உயிர் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது” என கூறினார்.
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சிறுரக வாகன ஓட்டிகளின் கருத்து என்னவெனில், இந்த சோதனைகள் அனைத்தும் கண் துடைப்புகளுக்கு தான் எனவும், பெரிய முதலாளிகளின் வாகனங்களை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வது கூட இல்லை எனவும், வயிற்று பிழைப்பிற்கான மாத தவணை கட்டி வாகனம் வாங்கி ஓட்டுபவர்களை பார்த்தால் மட்டும்தான் இந்த அதிகாரிகளுக்கு மிக ஏளனமாய் தெரியும் என கூறுகின்றனர். வாகனங்களின் தற்காப்புகளுக்காவே இந்த எக்ஸ்ட்ரா பம்பர்கள் போடப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே…! அரசு வாகனங்களிலும் சரி அரசியல்வாதிகளின் வாகனங்களிலும் சரி இந்த எக்ஸ்ட்ரா பம்பர்கள் உள்ளது.
அப்படி இது விதிமீறல் எனில் அந்த பம்பர்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அரசு எப்படி அங்கீகாரம் அளித்தது…? அரசு அதிகாரிகள் ஏன் தங்களின் வாகனங்களில் விதிகளை மீறி இந்த எக்ஸ்ட்ரா பம்பர்களை பொறுத்தினர்…? இதற்கு முன் இப்படிப்பட்ட வாகனங்களை R.T.O பார்த்ததே இல்லையா..? அப்போதெல்லாம் இதுபற்றி இத்தனை ஆண்டுகாலம் ஏன் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
அத்தி பூத்தாற்போல என்ற வார்த்தையினை அனைவரும் கேள்விபட்டுருப்பீர்கள். அதுபோன்று தான் இந்த அதிகாரிகள். ஏதோ ஒரு நாள் ஜீப்பினை சாலை ஓரமாக மரத்தடியில் நிறுத்துவது…! பாவப்பட்ட ஏமார்ந்த வாகன ஓட்டிகள் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஊதியத்தினை அபராதம் என்ற பெயரில் வசூலிப்பது…! அதன் மூலமாக நேர்மையான அதிகாரி என்ற பட்டம் பெறுவது…!
அனைத்து பொதுமக்களும் சாலையில் தாருமாறாக செல்லும் லாரிகளை கண்டுள்ளோம். எக்ஸ்ட்ரா பாடி கட்டி, அதற்கும் மேல் அதிக லோடுகளை ஏற்றிக் கொண்டு செல்லும் வாகனங்களை எல்லாம் இந்த அதிகாரிகள் ஒருபோதும் கண்டுகொள்வது இல்லை. காரணம் என்னவெனில் இந்த வாகனங்களின் முதலாளிகள் பெருமுதலாளிகள். இவர்கள் என்ன செய்தாலும் இந்த அதிகாரிகள் கண்டு கொள்ளக்கூடாது என்பது இந்த அதிகாரிகளின் சட்டம்.
அரசு வாகனங்களின் எக்ஸ்ட்ரா பம்பர்களினால் சென்சார் வேலை செய்யும்… பிற வாகனங்களின் எக்ஸ்ட்ரா பம்பர்களினால் பம்பர் வேலை செய்யாதா..? இந்த அதிகாரிகள் அரசு பேருந்துகளை எப்போதாவது ஆய்வு செய்துள்ளார்களா…? என இப்படி இந்த அதிகாரிகளின் போக்குகளை பற்றி பொதுமக்கள் நீண்ட பட்டியலிட்டு புலம்பிக் கொண்டே உள்ள இந்த தருணத்தில் இப்படி ஒரு நிகழ்வு மிகவும் அதிர்ச்சியாகவும், சிரிப்பூட்டும் வித்தத்தில் உள்ளதாகவும், வாகன ஓட்டிகளும், வாகன முதலாளிகளும் தங்களின் தவறுகளையும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
செத்த பாம்புகளை அடித்து பட்டம் பெறும் அதிகாரிகள் உள்ளவரை நல்ல உள்ளம் கொண்ட அடிமட்ட அரசு ஊழியர்கள் ஒருபோதும் உயர் பதவிகளுக்கு வரவும் முடியாது எனவும், அப்படி ஒருநாள் வந்தால் மட்டுமே அரசு இயந்திரம் எந்தவித கோளாறுமின்றி செயல்படும் என்பதே மக்களின் கருத்து.
No comments:
Post a Comment