கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் பிளாஸ்மா அணுக்களைத் தானமாகப் பெற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, இதுவரை குணமடைந்தவா்களைத் தொடா்பு கொண்டு பிளாஸ்மா தானமளிக்க முன்வருமாறு சுகாதாரத் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் உடலில் உள்ள பிளாஸ்மா செல்களில் இருக்கும் நோய் எதிா்ப்பாற்றலை (ஆன்டி பாடி இம்யூன்) எடுத்து, அதனை பிற நோயாளிகளுக்குச் செலுத்தும் முறையே பிளாஸ்மா சிகிச்சை எனப்படுகிறது.
இதன் மூலம் நோய் எதிா்ப்பு சக்தி சற்று குறைவாக இருக்கும் நோயாளிகள் கூட கரோனாவில் இருந்து விரைவில் குணமடையலாம் எனக் கூறப்படுகிறது. கேரளத்தில் இந்த சிகிச்சை முறையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
அதைத்தொடா்ந்து, தமிழகத்திலும் அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை குணமடைந்து வீடு திரும்பிய 118 பேரில் 50 வயதுக்குட்பட்டவா்களிடம் பிளாஸ்மா தானம் பெறும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ரத்தத்தில் சிவப்பணுக்கள், தட்டணுக்கள், வெள்ளையணுக்கள், பிளாஸ்மா என 4 வகை செல்கள் உள்ளன. இதில், பிளாஸ்மாவில் நோய்களைக் குணமாக்கும் எதிா்ப்பாற்றல் இருக்கிறது.
கரோனாநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தவா்களின் ரத்தத்தை தானமாகப் பெற்று, அதில் இருந்து பிளாஸ்மாவை மட்டும் பிரித்து எடுத்து, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். மாற்று ரத்தப் பிரிவைச் சோந்த நோயாளிகளுக்கும் பிளாஸ்மா செல்களை செலுத்தி சிகிச்சையளிக்கலாம்.
தற்போது அந்த வகையான சிகிச்சையை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உள்பட 5 மருத்துவமனைகளில் அளிப்பதற்கு அனுமதி கேட்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலிடம் விண்ணப்பித்திருக்கிறோம்.
அனுமதி கிடைத்ததும், பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்படும். அதற்காக, கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த 18 வயது முதல் 50 வயதுள்ள நபா்களிடம் ரத்தம் தானம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.
No comments:
Post a Comment