செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக்
கழகம் சார்பாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் பயிர்களை
உரிய நேரத்தில் எடை போட்டு கொள்முதல் நிலையங்களிலிருந்து அனுப்பி வைக்கப்படாமல் உள்ளது. மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட செண்டிவாக்கம்,
மோகல்வாடி, வேடந்தாங்கல், மொறப்பாக்கம், ஏரிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நேரடி
நெல் கொள்முதல் நிலையங்களில் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது
நெற்பயிர்களை விற்பனைக்காக கொண்டுவந்துள்ள தருணத்தில் உரிய நேரத்தில் மூட்டை கட்டாமலும்,
எடை போடாமலும் அதிகாரிகள் காலதாமதப்படுத்தியுள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணத்தினால் விவசாயிகள் கையில்
பணம் இல்லாமல் தவிக்கும் இந்த தருணத்தில் அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளமால் உள்ளதே
இதற்கெல்லாம் காரணம் என வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
மேலும், கடந்த ஞாயிற்றுக் கிழமை பெய்த திடீர்
மழையில் உரிய முறையில் பாதுகாக்கப்படாத நெற்பயிர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்
மழைநீரில் நனைந்து சேதமாகின.
இதனால் விவாசயிகள் மனமுடைந்ததை அறிந்த மதுராந்தகம்
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரில்
சென்று ஆய்வு நடத்தியதோடு விவசாயிகளின் குறைகளையும் கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக இன்று (27.04.2020) செங்கல்பட்டு
மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸை சந்திந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ புகழேந்தி, விவசாயிகளின்
துயரைப் போக்குவதற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விரைந்து நெற்பயிர்களை கொள்முதல்
செய்ய வேண்டும் எனவும், இயற்கை சீற்றங்கள் எந்த நேரத்தில் வரும் என்பதை முன்கூட்டியே
நம்மால் அறிய இயலாத காரணத்தினால் இந்த பணிகளை விரைந்து செய்ய உத்தரவிட வேண்டும் எனவும்
கோரிக்கை வைத்தார். மேலும், இதற்குண்டான பணப்பட்டுவாடாவை விரைந்து விவசாயிகளுக்கு அளிக்க
வேண்டும் எனவும் கோரினார்.
மேலும், மதுராந்தகம் எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த
இரு வாரங்களுக்கு முன்பே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சென்று இது தொடர்பான
ஆய்வுகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment