போலீசார்
பாதுகாப்புடன் கல் குவாரி இயக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பழவேரி
கிராமத்தினர், குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை, உத்திரமேரூர்
தாசில்தார் காலடியில் வீசியதால், பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம்
மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில்,
குடியிருப்புகளுக்கு அருகே புதிய கல் குவாரி துவக்கப்பட்டது. இப்பகுதியில்,
ஏற்கனவே, பல குவாரிகள் இயக்கப்படுவதால், பகுதிமக்கள்
அவதிப்படுகின்றனர்.இதனால், புதிய குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து,
அப்பகுதி மக்கள், நான்கு மாதங்களாக, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இறுதியாக, கடந்த வாரம், 14ம் தேதி, குடியிருப்புகளை விட்டு,
குடும்பத்தோடு மயானத்தில் குடியேறி, மூன்று நாட்களாக, அங்கேயே சமைத்து
சாப்பிட்டு, போராடினர்.
வாக்குறுதி
இதையடுத்து, 16ம் தேதி மாலை, மயானத்திற்கு
வந்து மக்களை சந்தித்த காஞ்சிபுரம் சப் - கலெக்டர் சரவணன், 'கல்குவாரி
தற்காலிகமாக செயல்படாது. மேற்கொண்டு,விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்'
என, வாக்குறுதி அளித்தார். இதையடுத்து, கிராமத்தினர், வீடுகளுக்கு
சென்றனர்.
இந்நிலையில், குவாரி துவங்க போவதை அறிந்த கிராமத்தினர், நேற்று
முன்தினம், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, செங்கல்பட்டு
டி.எஸ்.பி., கந்தன், படாளம் மற்றும் சாலவாக்கம் போலீசார் பாதுகாப்பில்,
குவாரி நேற்று காலை இயங்கியது.அப்போது, 100 பெண்கள் உட்பட, 300க்கும்
மேற்பட்டோர், போலீசாரிடமும், குவாரி உரிமையாளர்களிடமும் வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, குவாரி இயக்கப்படுவதாக,
அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆத்திரம்
இதனால்,
கடும் ஆத்திரமடைந்த கிராமத்தினர், வீடுகளில் இருந்த, குடும்ப அட்டை,
வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை எடுத்து சென்று, குவாரியில் இருந்த
உத்திரமேரூர் தாசில்தார் கோட்டீஸ்வரனிடம் கொடுத்தனர்.அவர் வாங்க
மறுத்ததையடுத்து, அந்த அட்டைகளை, தாசில்தார் காலடியில் வீசி, 'எங்களுக்கு,
அரசின் அடையாளங்கள் தேவையில்லை' எனக்கூறிவிட்டு சென்றனர்.
குடும்ப
அட்டைகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து, உண்ணாவிரத போராட்டத்தை
கைவிட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.கல் குவாரி உரிமையாளருக்கு
ஆதரவாக, மாவட்ட கலெக்டர், சப் - கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள்
செயல்படுவதாக, பழவேரி கிராமத்தினர் புகார் கூறினர்.'அதிகாரிகளுக்கு கண்டனம்
தெரிவிக்கும் வகையில், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்' என,
அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment