இங்கிலாந்து இளவரசி டயானா மறைந்து 23 வருடங்களுக்கு மேலாகியும் அவரது
புகழ் கொஞ்சம் கூட மறையவில்லை. அவர் உடற்பயிற்சி செய்யும் போது
அணிந்திருந்த நேவி ப்ளூ டி-சர்ட் ஒன்று தற்போது சுமார் 37 லட்சம்
ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளதன் மூலம் அவரை நேசிப்பவர்கள் இன்னமும்
இருக்கிறார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
இளவரசி டயானா பயன்படுத்திய ஆடைகள், நகைகள், புகைப்படங்கள் போன்றவை
அவ்வப்போது ஏலத்தில் விடப்படுவது வழக்கம். இதற்கு முன்பும் கடந்த 2017ஆம்
ஆண்டில் அவர் பயன்படுத்திய வெள்ளி கைப்பை ஒன்று சுமார் 10 லட்சம்
ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சில முக்கியமான நபர்களின் வாழ்க்கை பனித்துளிபோல் முதல் நாள் இரவில் தோன்றி
மறுநாள் காலையில் சூரியன் உதித்த உடனே உருகி காணாமல் போவது போல்
மிகக்குறுகிய காலத்தில் தோன்றி மறைந்துவிடுவதுண்டு. அதற்கு ஒரு உதாரணம்,
டயானா பிரான்செஸ் ஸ்பென்சர் எனப்படும் டயானா.
சாதாரண நடுத்தர குடும்பத்தில் 1961ஆம் ஆண்டில் பிறந்து வளர்ந்து
பின்னாளில் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் ஏற்பட்ட நெருக்கத்தால், இளவரசர்
சார்லஸ் உடன் காதல் வயப்பட நேர்ந்தது.
இதனையடுத்து தனது 20ஆவது வயதில்
சார்லஸை மணந்து வெகு விரைவிலேயே இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார். இவை
எல்லாமே மின்னல் வேகத்தில் தோன்றி சட்டென மறைந்தது போல் ஆகிவிட்டது.
டயானாவின் அழகு
இயற்கையிலேயே டயானா அழகி என்பதால் தான் பயன்படுத்தும் பொருட்களையும்
அழகானதாகவும் காஸ்ட்லியானதாகவும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி வந்தார்.
அவர்
பயன்படுத்திய ஆடைகள், கைப்பை முதல் கைக்கடிகாரம் வரை அனைத்துமே லட்ச
ரூபாய்க்கும் கூடுதலாகவே இருந்தது. மேலும் அவர் பயன்படுத்திய பொருட்கள்
அனைத்தும் அன்றைய கால கட்டத்தில் ஃபேஷனாக மாறியதும் உண்டு.
அதேபோல்
அவரையும் அவர் பயன்படுத்தும் பொருட்களையும் பார்த்து படம் பிடிப்பதற்காகவே
பாப்பராசிகள் (paparazzi) என்னும் பத்திரிக்கை நிருபர்களும்
காத்திருந்ததும் நடந்தது.
டயானா மரணம்
கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்டு 31ஆம் தேதியன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில்
பாப்பராசிகளின் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காக காரில் வேகமாக சென்றபோது
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.
அவர்
மரணமடைந்து கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் அவரின்
புகழும், அவர் பயன்படுத்திய பொருட்களின் மீதும் இன்றைக்கும்
பெரும்பாலானவர்களுக்கு ஈர்ப்பு உள்ளது என்பது ஆச்சர்யமளிக்கும்
உண்மையாகும்.
டயானாவின் பொருட்கள் ஏலம்
டயானா பயன்படுத்திய பொருட்கள் அவ்வப்போது ஏலத்தில் விற்பனை செய்யப்படுவது
வழக்கம். கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் அவர் பயன்படுத்திய 78 பொருட்களை
ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
அதில் குறிப்பாக அவர் பெயரின் முதல்
எழுத்தை குறிக்கும் D என்னும் எழுத்து பொறிக்கப்பட்ட நெக்லஸ், வெள்ளியால்
செய்யப்பட்ட கைப்பை, அவர் திருமணத்தில் வெட்டப்பட்ட கேக் துண்டு போன்றவை
அப்போது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
ரூ. 37 லட்சத்திற்கு ஏலம்
வெள்ளியால் செய்யப்பட்ட கைப்பை மட்டுமே சுமார் 15000 பவுண்டுகளுக்கு மேல்
விற்பனையானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவர் உடற்பயிற்சி செய்யும்போது
அணிந்திருந்த நேவி ப்ளு ஸ்வெட்டர் டைப் டி-சர்ட் ஒன்று சமீபத்தில் ஏலத்தில்
விற்பனை செய்யப்பட்டது. ஏல விற்பனையின் முடிவில் அந்த டி-சர்ட் சுமார் 37
லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
மறைந்தும் மறையாத புகழ்
நேவி ப்ளூ ஸ்வெட்டர் டி-சர்ட் ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையானதற்கு
முக்கிய காரணம், டயானா கார் விபத்தின் போது அதே போல ஒரு நீல கலர்
டி.-சர்ட்டையே அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மறைந்தது 22
ஆண்டுகள் ஆன பின்பும் அவர் பயன்படுத்திய பொருட்கள் ஏலத்தில் அதிக விலைக்கு
விற்பனையானது, அவரின் புகழ் இன்னும் குறையவில்லை என்பதையே உணர்த்துகிறது.
No comments:
Post a Comment