புதுச்சேரி அருகே 100 ஏக்கர் பரப்பளவில் தனி ஒருவன் உருவாக்கிய காடு
மக்களின் விழிகளை விரியச் செய்துள்ளது. தற்போது புதுச்சேரி மக்கள்
தூய்மையான காற்றை சுவாசிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாப்பதிலும் அந்த தனி
ஒருவன் உருவாக்கிய காடு முக்கிய பங்கு வகித்து வருகிறது.
அது குறித்த ஒரு
சிறப்பு செய்தி தொகுப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையடிவார பகுதியில் வளையாப்பட்டு கிராமத்தை
சேர்ந்தவர் சரவணன்.
இவர் இயற்கை மீது கொண்டிருந்த அதீத காதலாலும், மரங்கள்
மற்றும் வனத்தை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தில், 1989 ஆம் ஆண்டு
புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரில் தன்னை இணைத்துகொண்டு சமூக
சேவைகளையும், மரங்களை வளர்க்கும் பணிகளையும் செய்து வந்தார்.
இயற்கையின் மீது சரவணன் கொண்டிருந்த அளவுகடந்த காதலை பார்த்த ஆரோவில்
நிர்வாகத்தினர் புதுச்சேரியின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய ஊசுட்டேரி அருகே
உள்ள பூத்துறை கிராமத்தில் வெட்டாந்தரையாகவும், செம்மண் மேடாகவும்,
மரங்களற்றும் இருந்த 100 ஏக்கர் ஆரோவில் நிலத்தை சரவணனிடம் காடுகளை
உருவாக்குவதற்காக ஒப்படைத்தனர்.
மேலும் மரங்களே இல்லாத வெட்டாந்தரையாக
இருந்த அந்த நிலத்தில் சரவணனுக்கு ஒரு குடில் மட்டும் அமைத்து கொடுத்தனர்
ஆரோவில் நிர்வாகத்தினர். பிறகு அந்த இடத்தில் உலர் வெப்ப மண்டல காடுகளை
உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் சரவணன்.
மண் வளம்
முதலாவதாக அந்த நிலத்தில் மண் வளத்தை வளப்படுத்த மழைநீரை வீணாக்காமல்
சேமிக்க முடிவு செய்த அவர், அங்கு வரப்புகள் அமைத்து மழைநீர் வெளியே
செல்லாமல், மழைநீர் பூமிக்கடியில் செல்லும்படி செய்தார். இதனால் அந்த
பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. மண்ணின் வளமும்
சிறப்பானது.
பிறகு உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் 100 ஏக்கர் நிலத்தில்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதில்
சரவணனுக்கு நல்ல பலன் கிடைத்தது. சரவணனின் 25 ஆண்டு கால கடின உழைப்பால்
தற்போது மரம், செடி, கொடிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள்
வளர்ந்து, பச்சை போர்வை போர்த்திய போல பரந்து விரிந்து காட்சியளிக்கிறது
ஆரண்யா வனம்.
ஆரண்யா காடு
பரபரப்பான நகர வாழ்க்கைக்கு விடை கொடுத்து சற்று இயற்கையோடு உறவாடிவிட்டு
வரவேண்டும் என்று நினைப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக தற்போது
இந்த ஆரண்யா காடு இருந்து வருகிறது. ஆரண்யாவிற்குள் நுழையும் போதே அங்கு
துள்ளி விளையாடும் மயில்கள் நம்மை வரவேற்கின்றனர்.
வனத்திற்கு உள்ளே போக
போக அறிதாகவிட்ட குயில்களின் ஓசைகளும், பறவைகளின் இனிமையான சத்தங்களும் நம்
செவிகளுக்கு விருந்து படைக்கின்றன. மேலும் அங்குள்ள பல ஆயிரக்கணக்கான
மூலிகை செடிகளின் வாசம் நம் உடலை புத்துணர்ச்சி அடைய செய்கிறது.
சரவணன் உருவாக்கிய வனம்
தற்போது சரவணன் உருவாக்கிய இந்த ஆரண்யா வனத்தில், செம்மரம், தேக்கு, மா,
பலா, கருங்காலி, வேங்கை உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட மர வகைகளும்,
மாங்குயில், மயில், பச்சப்புறா, கொண்டாலத்தி, அமட்டகத்தி உள்ளிட்ட 240 பறவை
வகைகளும் உள்ளன.
அதுமட்டுமல்லாமல் மான், முல்லம்பன்றி, காட்டுப்பன்றி,
தேவாங்கு, உடும்பு, எறும்புதிண்ணி, நட்சத்திர ஆமை உள்ளிட்ட 40 க்கும்
மேற்பட்ட வன விலங்குகள் மற்றும் பல்வேறு வகையான பாம்பு இனங்களும் இங்கு
வசித்து வருகின்றன.
இலவச அனுமதி
ஆரண்யாவிற்கு செல்வதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. நீங்கள் இயற்கை
நேசிப்பராகவும், இயற்கையைப் பற்றியும், வனத்தை பற்றியும் தெரிந்து கொள்ளும்
ஆர்வம் இருந்தால் மட்டும் போதும் ஆரண்யா உங்களுக்கும் சொந்த என்கிறார்
சரணவனன். சரவணன் உருவாக்கிய ஆரண்யா வனத்தை காண்பதற்காகவும், ஆரண்யாவில்
தங்கி ஆராய்ச்சி செய்வதற்கும் பெருமளவில் பலரும் வருகின்றனர்.
வெளி மாநிலங்களிலிருந்து
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் தாவரவியல்
அறிஞர்கள், பேராசிரியர்கள், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள், பறவை
ஆர்வலர்கள், வன உயிரின ஆர்வலர்கள் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
அவர்களுக்கு மரம் மற்றும் காடுகள் வளர்ப்பது குறித்த பயிற்சியையும், சூழல்
கல்வி, பல்லுயிர் பெருக்கம் குறித்த பயிற்சியை அளித்து வருகிறார் சரவணன்.
சிலர் ஆரண்யாவிலேயே பல நாட்கள் தங்கியிருந்து காடுகள் குறித்த
ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சாதனை
மேலும் தனி ஒருவனாக ஆரண்யாவை உருவாக்கிய சரவணன் தன் பணி நிறைவடைந்ததாக
கருதி காட்டைவிட்டு வெளியேறிவிடவில்லை. தன் மனைவி மற்றும் மகளுடன் அந்த
காட்டிலேயே ஒரு வீட்டை கட்டி இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறார்.
மேலும் சரவணனின் இத்தகைய சேவைகளை பாரட்டி தமிழக அரசு சார்பில் விழுப்புரம்
மாவட்ட கௌரவ வன உயிரியல் பதவியை கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் விழுப்புரம் மாவட்ட வளர்ப்பு யானைகளின் பராமரிப்பு
குழுவின் உறுப்பினராகவும் சரவணன் இருந்து வருகிறார்.
தூய்மையான காற்று
தற்போது புதுச்சேரி மற்றும் புதுச்சேரியை சுற்றியுள்ள தமிழக பகுதி மக்கள்
தூய்மையான காற்றை சுவாசிக்க முடிகிறது என்றால் அதற்கு சரவணன்
உருவாக்கியுள்ள இந்த ஆரண்யா வனம் ஒரு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்றே
கூறலாம். மேலும் ஆரண்யா வனத்தை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் நிலத்தடி
நீர் மட்டமும் பெருமளவு பாதுகாக்கப்படுகிறது.
சென்னைக்கும் தேவை
சென்னை போன்ற பெருநகரங்களில் தற்போது தண்ணீர் பஞ்சம் நிலவி வரும்
இச்சூழலில், சரவணனை போன்று 100 ஏக்கரில் காட்டை வளர்க்க முடியாவிட்டாலும்,
ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தவரை ஒரு மரக்கன்றையாவது நட்டு பராமரித்து
வந்தால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டுவது மட்டுமின்றி, தண்ணீர் பஞ்சமும்
ஏற்பட வாய்ப்பில்லை என்பதில் எவ்வித மாற்றுகருத்தில்லை.
சரவணன் போன்ற
இயற்கை பாதுகாவலர்களை பாராட்டுவதோடு மட்டுமின்றி, இனி வரும் காலங்களில்
நாமும் மரம் வளர்ப்போமென உறுதியேற்போம். இயற்கையை பாதுகாப்போம்.
No comments:
Post a Comment