நகரின் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில்
புறநகர் பகுதிகளுக்கு இடம் பெயரும் மக்களிடம் அதிக வாடகை கட்டணம்
வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான குடிநீர்
தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான
மோட்டார் பம்புகளிலும் கைப்பம்புகளிலும் தண்ணீர் வந்து பல மாதங்கள்
ஆகிவிட்டது.
தனியார் தண்ணீர் லாரிகள்தான் தற்போது சென்னை மக்களின் ஆபத்பாண்டவனாக
உள்ளது. அன்றாட தேவைக்கே தண்ணீர் இன்றி அல்லாடும் மக்கள் தனியார் தண்ணீர்
லாரிகளில் ஒரு டேங்கர் இவ்வளவு என மொத்தமாக பேசி சம்புகளில் இறக்கி
பயன்படுத்தி வருகின்றனர்.
குடியிருப்பு வாசிகளிடம் கட்டணம்
பல குடியிருப்புகளில் இப்படி பெறப்படும் தண்ணீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள்
இத்தனை குடம்தான் என கணக்கோடு வழங்கப்படுகிறது. டேங்கர்களில் பெறப்படும்
தண்ணீருக்கான கட்டணம் குடியிருப்பு வாசிகளிடம் ஷேர் செய்து
வசூலிக்கப்படுகிறது.
அத்தியாவசிய தேவைக்கும்
வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் குடி தண்ணீர் கேன்களை வாங்கி
பயன்படுத்துவது வாடிக்கைதான். ஆனால் தற்போது குளிப்பது உட்பட அனைத்து
அத்தியாவசிய தேவைக்கும் காசுக்கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது.
புறநகர் பகுதிகளில்
இதனால் தவிப்புக்கு ஆளான மக்கள் இது சரிப்பட்டு வராது என முடிவு செய்து
நகர் பகுதியில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு வீடுகளை ஷிப்ஃட்
செய்கின்றனர். வழக்கமாக புறநகர் பகுதிகளில் வீட்டு வாடகை குறைவாகவே
இருக்கும்.
புறநகரில் வாடகை உயர்வு
நகர் பகுதிகளில் சிங்கிள் பெட்ரூம் வீட்டிற்கு கொடுக்கும் வாடகையை விட
புறநகர் பகுதியில் டபுள் பெட்ரூம் வீட்டிற்கு கொடுக்கும் வாடகை குறைவாகதான்
இருக்கும். ஆனால் தற்போது நிலவும் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க முடியாமல்
புறநகர் பகுதிகளிலும் வாடகை வீட்டிற்கான கட்டணத்தை வீட்டின் உரிமையாளர்கள்
உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
துண்டு விழும் பட்ஜெட்
பட்ஜெட் போட்டு செலவு செய்யும் சென்னை மக்கள் தண்ணீர் பிரச்சனையால் அனைத்து
செலவுகளும் கணிசமாக அதிகரித்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதனால்
தங்கள் பட்ஜெட்டில் மாதம்தோறும் துண்டு விழுந்து பெரும் நெருக்கடி
ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment