மனைவி உயிரிழக்கக் காரணமான டாஸ்மாக் கடையை போராடி மூட வைத்ததுடன்,
அவரது உடலை, விபத்து நடந்த இடத்திற்கு அருகிலேயே கணவன் புதைத்த சம்பவம்
நம்மை புரட்டி போட்டுள்ளது.
கோவையை அடுத்த கணுவாய்ப் பகுதியைச் சேர்ந்தவர்தான் ரமேஷ். இவர் ஒரு
டாக்டர். இயற்கை ஆர்வலரும்கூட. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பல
காரியங்களை முன்னெடுத்து செய்து வருபவர்.
இவருக்கு ஷோபனா என்ற மனைவி, சாந்திதேவி என்ற மகள் உள்ளனர். மகள்
ஆனைகட்டியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். இவரை ஸ்கூலிலிருந்து தினமும்
அழைத்து வருவது ஷோபனாதானாம்.
உயிரிழந்தார்
அப்படித்தான் வண்டியில் உட்காரவைத்து மகளை அழைத்து வந்தபோது, தாறுமாறாக
வந்த பைக் ஒன்று ஷோபனாவின் ஸ்கூட்டரில் மோதியது. இந்த பயங்கர மோதலில் ஷோபனா
சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சாந்திதேவி பலத்த அடியோடு
உயிருக்குப் போராடினார்.
கதறினார்
பைக்கில் வந்த பாலாஜி என்பவர் ஃபுல் போதையில் வண்டியை ஓட்டிவந்து இப்படி
மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. விரைந்து வந்த போலீசார், இந்த
விபத்து குறித்து உடனடியாக ரமேஷூக்கு தகவல் சொன்னார்கள். கண்ணெதிரே ரத்த
வெள்ளத்தில் மனைவி பிணமாகவும், மகள் உயிருக்குப் போராடியதையும் கண்டு ரமேஷ்
கதறினார்.
டாஸ்மாக்
உடனடியாக மகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார். ஷோபனாவின் உடலை
கட்டிப்பிடித்து கதறி அழுதார். மனைவியின் சடலத்தை நடுரோட்டில் வைத்து,
டாஸ்மாக்கை மூடுங்கள் என்று ஆவேச போராட்டம் நடத்த துவங்கிவிட்டார்.
அவருக்கு ஆதரவாக பழங்குடியின மக்களும் போராட்டத்தில் இறங்கி விட்டனர்.
இதனால் விஷயம் பெரிசானது. "மதுவால் இனியொரு குடும்பம் பாதிக்கப்படக்
கூடாது. உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என்று ஆவேசமாக சொன்னார்
சீமான். இதையேதான் டாக்டர் ராமதாசும் அறிக்கை மூலம் வலியுறுத்தினார்.
சமரசம்
விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் ரமேஷிடம் சமரசம் பேசினர். ஆனால் ரமேஷின்
உறுதியை பார்த்து மிரண்ட அதிகாரிகள் கடையை அங்கிருந்து மாற்றுவதாக எழுத்து
பூர்வமாக எழுதி தந்தார்கள்.
இதையடுத்து சொன்னபடியே குறிப்பிட்ட மதுக்கடை
மூடப்பட்டது. சோபனாவின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்து, ரமேஷிடம்
ஒப்படைக்கப்பட்டது.
நல்லடக்கம்
மனைவியின் சடலத்தை பெற்றுக் கொண்ட ரமேஷ், விபத்து நடந்த இடத்திற்கு
அருகிலேயே உள்ள மயானத்தில் பழங்குடியின முறைப்படி அடக்கம் செய்தார். தண்ணி
அடித்துவிட்டு வண்டியை ஓட்டி, இனி யார் உயிரையும் பறித்துவிடக்கூடாது
என்பதற்கான அடையாளமாகத்தான் ஷோபனாவின் நல்லடக்கத்தை நடத்தி உள்ளார் ரமேஷ்.
கோரிக்கை
நம்மில், எத்தனை பேருக்கு ரமேஷின் இந்த மனநிலையும், அந்த மனநிலையின்போது
வெளிப்படுத்தும் நிலைப்பாட்டின் உறுதியும் இருக்கும் என்று தெரியாது. ஆனால்
இனி ஒரு உசுரு இப்படி அநியாயமாக போய்விடக்கூடாது என்பதுதான் அனைவரின்
எதிர்பார்ப்பும்!
No comments:
Post a Comment