வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ராமநாதபுரத்தில் பரபரப்பு: மணல் திருட்டை தடுத்தவர் கொடூரக் கொலை, 4 பேருக்கு அரிவாள் வெட்டு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, June 03, 2019

ராமநாதபுரத்தில் பரபரப்பு: மணல் திருட்டை தடுத்தவர் கொடூரக் கொலை, 4 பேருக்கு அரிவாள் வெட்டு

ராமநாதபுரத்தை அடுத்த இளமனூர் அருகே உள்ள புழுதி கண்மாய் பகுதியில் அரசு உரிமம் பெற்ற மணல் குவாரி உள்ளது.


 ஆனால் இங்கு அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாக அதிக ஆழத்தில் மணல் தோண்டி எடுக்கப்படுவதாகவும், கண்மாய் கரைகளையும் வெட்டி மணல் எடுப்பதாகவும் புகார் எழுந்தது.


 இதையடுத்து இளமனூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மோகன் (வயது 42) மற்றும் சிலர் நேற்று மாலை புழுதி கண்மாய் பகுதிக்கு சென்று அங்கு லாரி மற்றும் டிராக்டர்களில் மணல் திருடிக் கொண்டிருந்தவர்களை கண்டித்து தட்டிக் கேட்டனர்.


 மேலும் அங்கு மணல் எடுக்கக் கூடாது என்று கூறினர். இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அங்கு மணல் திருடிக் கொண்டிருந்தவர்கள் செல்போனில் கொடுத்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்தது.

அந்த கும்பல் அரிவாள் மற்றும் இரும்புக்கம்பி போன்ற ஆயுதங்களால் மோகன் மற்றும் அவருடன் வந்தவர்களை சரமாரியாக தாக்கினர்.

 இதில் படுகாயமடைந்த மோகனை கண்மாயின் ஒரு பகுதியில் தேங்கியிருந்த தண்ணீர் மற்றும் சேற்றில் அமுக்கி கொடூரமாக கொலை செய்தனர். மற்றவர்கள் காயத்துடன் தப்பியோடி உயிர் பிழைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த கும்பலைச் சேர்ந்தவர்களே மோகனின் உடலை ஒரு காரில் ஏற்றி ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விட்டு தப்பியோடி விட்டனர்.

 மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இளமனூர் கிராமத்தைச் சேர்ந்த சாத்தையா(37), முருகேசன்(37), லட்சுமணன்(32), செல்வம்(44) ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது பற்றி தகவலறிந்த இளமனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர்.

 கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆஸ்பத்திரி முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியிலில் ஈடுபட்டனர்.


 இதனால் அந்த பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.


 கொலை செய்யப்பட்ட மோகனுக்கு சாந்தி(34) என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த சம்பவம் பற்றி இளமனூர் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment