இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் கடல் வழியாக கேரளாவிற்குள் ஊடுருவும்
வாய்ப்பு இருப்பதையடுத்து, அங்கு பாதுகாப்பும், கண்காணிப்பும்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில், கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம் உள்ளிட்ட இடங்களில்
தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 256
பேர் உயிரிழந்தனர். இந்த கோர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு
பொறுப்பேற்றது.
இந்த நிலையில், இலங்கையில் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து
வருகிறது. இதில், இந்தியாவை சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக
கருதப்படுகிறது. அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்களுடன் தொடர்பு
வைத்திருந்தது தெரிய வந்தது.
மேலும், தமிழகம் மற்றும் கேரளாவில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி
சோதனைகளை நடத்தினர். இதில், கேரளாவில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கையை தொடர்ந்து கேரளாவிலும் தற்கொலை
தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
இதனிடையே, சில நாட்களுக்கு முன் இலங்கையில் இருந்து 15 ஐஎஸ்ஐஎஸ்
தீவிரவாதிகள் படகு மூலமாக லட்சத்தீவை நோக்கி வருவதாக மத்திய புலனாய்வுத்
துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த படகில் இருக்கும் தீவிரவாதிகள்
கேரளாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாகவும் கருதப்படுகிறது.
இதையடுத்து, கேரள கடற்கரையோர பகுதிகளில் கண்காணிப்பு
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா முழுவதும் பாதுகாப்பும்
பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேரள டிஜிபி
லோக்நாத் பஹேரா ஆய்வு நடத்தியுள்ளார்.
கேரளாவின் கடலோர மாவட்டங்களை சேர்ந்த காவல் துறை கண்காணிப்பளர்கள் கடலோரப்
பகுதிகளில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் தீவிரப்படுத்துமாறும்
சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கடலோர காவல் படையினரும் தீவிர
கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான படகுகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்படுகிறது.
மீனவர்களும், பொதுமக்களும் சந்தேகத்திற்கிடமான படகுகள் மற்றும் ஆட்கள்
நடமாட்டம் குறித்து தகவல் தருமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment