தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வரும்
ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக
அறிவித்துள்ளது.
பள்ளி பருவத் தேர்வுகள் முடிவுற்றதைத் தொடர்ந்து கோடை விடுமுறை
மற்றும் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி
முதல் பள்ளிகளுக்கு 50 நாள்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
பள்ளிகள் ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்படும் என்று ஏற்கனவே
தெரிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது பள்ளிக் கல்வித் துறை இதனை
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், ஜூன் 3-ஆம் தேதி
அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன்
வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும்
அனைத்து வகை பள்ளிகளிலும் 2019-2020-ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கான
பாடத் திட்டங்கள் முழுமையான அளவில் முடிக்கப்பட வேண்டியுள்ளது.
எனவே மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறைக்குப் பின்னர் வரும் ஜூன் 3-ஆம்
தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள்,
நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டு,
தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு குடிநீர், கழிப்பறை ஆகிய
அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்திருக்க வேண்டும் என சுற்றறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment