நிதிப்பற்றாக்குறை காரணமாக சேவை முற்றிலும் நிறுத்தப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பைலட் உள்ளிட்ட பணியாளர்கள் கடும் பணச்சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
பிற நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட தொழில் நுட்ப ஊழியர்கள் பலர் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க ரெயில் டிக்கெட்டுகளுக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேஷனல் ஏவியேட்டர்ஸ் கில்டின் கேப்டன் அசிம் வாலியானி கூறும்போது, "இன்று காலை சக பைலட்டிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் தனது விலை உயர்ந்த பைக்கை விற்று விட முடிவு செய்துள்ளதாக என்னிடம் தெரிவித்தார்.
பல ஊழியர்களும் தங்கள் தினசரி செலவுகளைக் கூட சந்திக்க முடியாத கஷ்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்" என்றார். ஜெட் ஏர்வேஸில் 15 ஆண்டுகளாக பணியாற்றிய சீனியர் பொறியாளர் ஒருவர் பலரும் கடும் பணக்கஷ்டத்தில் உழல்வதாகத் தெரிவித்தார், குறிப்பாக பைலட் ஒருவர் தன் சகோதரி திருமணச் செலவுகளுக்காக பலரிடமும் பணம் கேட்டு வருகிறார் என்றார்.
'கடந்த வாரம்தான் சக ஊழியர் மகன் சிகிச்சைக்காக நிதி திரட்டினோம், மருத்துவ பில்கள் லட்சக்கணக்கை தாண்டிய போதும், பையனைக் காப்பாற்ற முடியவில்லை' என்றார்.
இன்னொரு பெயரை வெளிடிட விரும்பாத ஊழியர் ஒருவர் கூறும்போது, சம்பளப்பாக்கியினால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் ஒரு ஊழியர் அவதிப்பட்டு வருவதைத் தெரிவித்தார்.
ஊருக்குச் சென்று குடும்பத்தினரைப் பார்க்கக் கூட ரயில் டிக்கெட் எடுக்க முடியாத நிலையில் சில கீழ்நிலை ஊழியர்கள் கஷ்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். குறைந்த சம்பளதாரர்கள் சேமிப்பு செய்ய முடியாததால் தற்போது மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றனர். ஸ்டேட் வங்கித் தலைமை வங்கிகள் கூட்டமைப்பு ஜெட் ஏர்வேசுக்கு ஏதாவது வழிகாட்டுதல் செய்தால்தான் ஊழியர்கள் நிலுவைச் சம்பளம் கிடைக்கும் நிலை உள்ளது.
No comments:
Post a Comment