ஐம்பது அடி தூரம் நடந்தாலே, இந்த புத்தக மூட்டையை சுமந்து கொண்டு எப்படி நடந்து வருவது என நம்ம வீட்டு குட்டீஸ் தர்ணா செய்கிறார்கள். இவர்கள் வீட்டை விட்டு கீழே இறங்கியதும், பள்ளிக்கு செல்ல பைக், வேன், ஆட்டோ அல்லது பள்ளி பேருந்து காத்து இருக்கிறது.
இது போன்று சொகுசாக பயணம் செய்யும் நம்ம பிள்ளைகளுக்கு மத்தியில் தினமும் 14 கிலோமீட்டர் நடந்தே பள்ளிக்கு சென்று வருகிறார் நிகிதா. நிகிதா, மகாராஷ்டிரா மாநிலம் ரெய்காட் அருகேயுள்ள பால்சில் கிராமத்தை சேர்ந்தவர்.
9ம் வகுப்பு படிக்கிறார். இவர் பள்ளிக்கு தினமும் 14 கிலோ மீட்டர் நடந்தே செல்கிறார். அதுவும் பயங்கர மிருகங்கள் நிறைந்த வனப்பகுதியை கடந்து. நிகிதாவின் தந்தை ஒரு ஏழை விவசாயி. அவர் சம்பாதிப்பது குடும்பத்தின் செலவிற்கே சரியாக இருப்பதால், அவரால் நிகிதாவின் பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை.
நிகிதா நடந்து செல்லும் சில நேரம் காட்டுப்பன்றிகள் குறுக்கிடும். அதை சமாளித்து பாம்பு மற்றும் பூரான்களை கடந்தே பள்ளியை அடைகிறார். தினமும் இரண்டு மணிநேரம் முன்னதாக நடையை தொடங்கினால்தான் குறிப்பிட்ட நேரத்திற்கு இவரால் பள்ளியை அடைய முடியும். மாலை அவர் வீடு திரும்பும் போது இருட்டிவிடும். டாக்டராக வேண்டும் என்ற தனது ஆசைக்கு மத்தியில் இந்த நடைபயணம் அவருக்கு சுகமான சுமையாக உள்ளது என்கிறார் நிகிதா.
நிகிதாவின் கல்வி ஆர்வம் குறித்து மராட்டிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து புனேயை சேர்ந்த சிட்டி கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் அவருக்கு உதவ முன்வந்தது. அந்த நிறுவனம் மாணவி நிகிதாவிற்கு மின்சார சைக்கிள் ஒன்றை கடந்த மாதம் 25ம் தேதி பரிசாக அளித்தது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சிறுமி நிகிதாவின் கல்வி ஆர்வம் குறித்து அறிந்த எங்கள் நிறுவனம் அவருக்கு எலக்ட்ரிக் சைக்கிளை பரிசாக வழங்கியுள்ளது.
இனி அவர் தனது பயணம் குறித்து கவலை கொள்ளத்தேவையில்லை. அவரது மருத்துவ கனவு நிறைவேற எங்கள் வாழ்த்துக்கள்’’ என தெரிவித்தார். இது தொடர்பாக நிகிதா கூறுகையில், ‘‘என்னுடைய பள்ளி படிப்பு முடியும் வரை நடந்து தான் செல்லவேண்டுமோ என நினைத்திருந்தேன். பல நேரங்களில் நடந்து வரும் அசதியினால் பள்ளியில் தூங்கிடுவேன். இப்போது சைக்கிளில் பள்ளிக்கு பறந்து செல்கிறேன்’’ என்றார் நிகிதா.
மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த எலக்ட்ரிக் சைக்கிளை 2 மணிநேரம் சார்ஜ் ஏற்றினால் 100 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். நிகிதாவின் மருத்துவ கனவு நிறைவேற நாமும் வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment