கோயில் மண்டபங்கள் என்ன கார்களும் பைக்களும் நிறுத்தும் பார்க்கிங் ஏரியாவா என்று உள்ளம் கொதித்துப் போய் குமுறுகின்றனர் பக்தர்கள்.
இந்து சமய அறநிலையத் துறையின் சீர்கேடுகளில் இதுவும் ஒன்று என்பது மட்டுமல்ல, இதிலும் கூட ஆலயங்களுக்கு அவமரியாதை செய்தும், காசு வசூலித்தும் கேவலப் படுத்துகின்றார்கள் என்று புகார் கூறுகின்றனர் பக்தர்கள்.
திருச்சி திருஆனைக்கா திருக்கோவில் பஞ்ச பூதத் தலங்களில் ஒன்று. நீர் தலம் என்று புகழ்பெற்ற இந்த ஆலயத்தின் கருவறையில் லிங்கப் பிரானைச் சுற்றிலும் நீர் சுரந்து கொண்டிருக்கும்.
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயம் பாடல் பெற்ற சிவத் தலம். விழாக்கள் முழுதும் களைகட்டும் தலம்,. பிரமாண்ட விபூதிப் பிராகாரம் உள்ளடங்கிய திருக்கோவில். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் இக்கோயில் பல சர்ச்சைகளைக் கண்டிருக்கிறது.
தற்போதைய சர்ச்சை, அறநிலையத் துறை அதிகாரிகள் தொடர்புடையது.
பழங்காலத்திலும் மன்னர்கள் பல்லக்குகளில் வந்தாலும், ஆலயத்தின் வெளியே இறங்கிவிட்டு, சந்நிதிக்கு நடையாய் நடந்துதான் வந்திருக்கிறார்கள். தங்கள் பாதம் ஆலயத்தின் தரையில் படுவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.
இன்னும் மேலே போய், ஆலயத்தைக் கட்டியவர்களும், மன்னர்களும் கூட தங்கள் உருவங்களை சிறிய அளவில் கோவில் படிகளில் பதிந்து, கீழே விழுந்து கைகூப்பி வணங்குவது போல் அமைத்திருப்பார்கள். ஆலயத்துக்கு வரும் அன்பர்களின் பாத தூளி தங்கள் மேல் படுவது போன்ற பிரமையை, மன எண்ணத்தை பெறுவது இதன் பின்புலம்.
பக்தர்களின் பாத தூளி படும் வகையில் மன்னனும் தன்னை எண்ணிக் கொண்ட நாட்டில்தான், இப்போது அறநிலையத்துறை அசிங்கம் பிடித்த பிச்சைக்காரர்களான அதிகாரிகள் கௌரவம் என்று கருதி காரில் வந்து கருவறை முன்னர் வரை வந்து இறங்குகின்றனர் என்று பக்தர்கள் பொருமித் தள்ளுகின்றனர்.
இந்து அறநிலையத் துறை அராஜகம் – மூவர் பாடல் பெற்ற திருத்தலத்தலமான திருஆனைக்காவில் (திருவானைக்கோவிலில்) 19-03-2019 அன்று உச்சிகால பூஜை… அம்பாள் சுவாமி சன்னதிக்கு வரும் முன்பு, மேற்கு கோபுரத்திலிருந்து கொடிமரத்துக்கு உள்ளே வேகமாக வந்து, இன்னோவா காரில் வந்து இறங்கிய அறநிலையத்துறை அதிகாரிகள், அங்கே காரை நிறுத்தி யிருக்கிறார்கள்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள பக்தர்கள், இது ஆலயமா அல்லது கார் நிறுத்தும் இடமா என்று கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் சந்நிதிக்கு உள்ளே வர வேண்டியது தான் பாக்கி… யானை வரும் இடத்தில் இன்னோவா வராதா என்பதுதானே அவர்களின் கேள்வி! என்று குற்றம் சாட்டுகின்றனர்.
கோவிலில் உள்ள சாமிகள் வாகனங்களில் வீதி உலா வருவதைப் பார்த்து இருக்கிறோம்.
தற்போது நடைபெறும் திராவிட இயக்கங்களின் ஆட்சியில், ஆசாமிகள் இப்படி சொகுசு வாகனங்களில் கோவிலுக்குள் வந்து இறங்குவதை இப்போதுதான் பார்க்கிறோம்… வெள்ளைக்கார துரைமார்கள் தங்கள் அலுவலகத்துக்கு முன்பு வந்து இறங்குவதைப் போல்… இந்தச் சீமான்கள் ஆலயத்துக்குள் அலுவலகத்தை வைத்துக் கொண்டு, அதன் முன் வந்து இறங்குகிறார்கள் என்று மனம் பொருமித் தள்ளுகின்றனர்.
பொதுவாக, கோயில்கள் உயர்த்தப் பட்ட படிகளுடன், கோபுர வாசல்களுடன் அமைக்கப் பட்டிருக்கும். முற்காலங்களில் சகடை வண்டியில் பெருமான் திருவீதி உலாவுக்கு என கற்களை அவ்வப்போது அமைத்து படிகளில் ஏறிச் செல்ல வழி ஏற்படுத்தியிருப்பர். சில ஆலயங்களில் சாய்மான தளம் அமைக்கப் பட்டிருக்கும்.
ஆனால், அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் ஏதோ தங்கள் சொந்த வீடு என்று கருதி, படிகளை அகற்றி, அதில் சாய்மான தளம் அமைத்து, எங்கெல்லாம் தடைகள் இருக்குமோ அவற்றை எல்லாம் அகற்றி, கார் போக வழி ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
இன்னும் சில ஆலயங்களில், அதிகாரிகளின் கார் வருவதற்காக, ஆலயத்தின் மதில் சுவரை இடித்து வழி ஏற்படுத்திய செயலும் நடைபெற்றுள்ளது. அறநிலைத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் ஆத்திகவாதியாக இருக்க வேண்டும்! நாத்திகர்கள் பணிபுரிந்தால் இது போன்று சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்பு அதிகரிக்கும்! தமிழக அரசு இதை கவனித்து அறநிலை துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் பக்தர்கள் சார்பாக இதனை கண்டிக்கிறோம் என்கின்றார்கள் இப்பகுதியினர்.
மேலும், இது போன்ற அதிகாரிகள், சம்பளம் 50 ஆயிரத்துக்கும் ஒரு லட்சத்துக்கும் மேல் வாங்கனார்கள் என்றால், அவர்கள் என்ன மிதிவண்டியிலும் பைக்கிலுமா வருவார்கள் என்று கேள்வி எழுப்பும் சிலர், கோயில் உண்டியல் பணத்தில் கார் வாங்குவது, பெட்ரோல் அலவன்ஸு எடுப்பது, மேல் வருமானம் என்று இருந்தால், கருவறைக்கே காரில்தான் வருவார்கள் என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
இது போன்று, இன்னொரு பாடல் பெற்ற தலமான திருக்குற்றாலம், திருக்குற்றாலநாதர் கோயிலில், ஆலயத்தினுள் உள்ள முகப்பு மண்டபத்தில், இருசக்கர வாகனங்களை நிறுத்தி, பார்க்கிங் ஏரியாவாக மாற்றிய அறநிலையத்துறையைக் கண்டித்து, அப்பகுதி பக்தர்கள் குரல் எழுப்பினர்.
இப்படிப்பட்ட அராஜகங்களைச் செய்வதால்தான், அறநிலையாத் துறை என்றும், அராஜகத் துறை என்றும், ஆலயங்களை நிர்வகிக்கும் துறைக்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள் பொதுமக்கள். இன்னும் எத்தனை காலத்துக்கு இத்தகைய அடாவடிகளை நாம் பார்க்கப் போகிறோம்?!
No comments:
Post a Comment