பாஜக தலைவர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சத்தீஸ்கர்
மாநிலம் ராய்பூரில் செய்தியாளர்கள்
ஹெல்மெட் அணிந்து பேட்டி எடுத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரில் சுமண் பாண்டே என்ற உள்ளூர் செய்தியாளர்,
நான்கு பாஜக பிரமுகர்களால் மோசமாக தாக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் பாஜக
மாவட்ட தலைவர் ராஜீவ் அகர்வால் மற்றும் 3 பாஜக பிரமுகர்களை போலீசார் கடந்த
சனிக்கிழமை கைது செய்தனர்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
இந்நிலையில், புதன்கிழமை அன்று செய்தியாளர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு பாஜக தலைவர்களிடம் பேட்டி எடுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தலைகவசம்
இது தொடர்பாக ராய்பூர் பிரஸ் கிளப் தலைவர் டாமு அமேதரே கூறுகையில், எங்கு நிகழ்ச்சிகள் நடந்தாலும், செய்தியாளர் சந்திப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தாலும், யாரையாவது சந்தித்து பேட்டி எடுத்தாலும், எங்களை அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க ஹெல்மெட் அணிந்துள்ளோம்
என்றார்.
பாஜக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டதை கண்டித்து 600 க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் ராய்பூரில் பேரணியாக வந்தனர். தொடர்ந்து பாஜக அலுவலகம் முன்பு குவிந்த பத்திரிக்கையாளர்கள், தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இரண்டு நிபந்தனைகள்
ஹெல்மெட்டை கழற்ற வேண்டும் என்றால் இரண்டு நிபந்தனைகளை அவர்கள் விதித்துள்ளனர். ஒன்று, தாக்குதல் நடத்திய மாவட்ட பாஜக தலைவர் அகர்வாலை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். இரண்டாவதாக பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க சத்தீஸ்கர் சட்டமன்றத்தில் புதிதாக சட்டம் இயற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரகசியமாக வீடியோ
கடந்த சனிக்கிழமை அன்று சத்தீஸ்கர் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் மாநில பொறுப்பாளர் சுபாஷ் ராவ் தலைமையில் கூட்டம் நடந்தது. இதனை படம் பிடிக்க வேண்டாம் என பத்திரிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் சுமன் பாண்டே என்ற பத்திரிக்கையாளர் மட்டும் பாஜக ஆலோசனை கூட்டத்தை ரகசியமாக வீடியோ எடுத்தார்.
பாஜக விளக்கம்
இதனை கண்ட பாஜக தலைவர் அகர்வால் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் நான்கு பேர் சுமன் பாண்டேவை கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த பாண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாஜக மாநில பொறுப்பாளர் சுபாஷ் ராவ் விளக்கமளித்துள்ளார். பத்திரிக்கையாளரை தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. அதன் பிறகு எங்களை என்ன செய்ய சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
No comments:
Post a Comment