அதிமுக தலைவர்களுக்கு எல்லாம் என்ன ஆச்சோ தெரியவில்லை.. ஆளாளுக்கு ஒரு
கோயிலில் யாகங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
முன்பெல்லாம் ஒரு பிரச்சனை என்றால் ஜெயலலிதா உடனே கோவிலுக்கு ஓடிபோய் யாகம்
நடத்தி விடுவார். இல்லையென்றால் சிறப்பான பூஜை, வழிபாடுகளை செய்வார். அவர்
செய்யாவிட்டாலும் அவர் சார்பில் செய்யப்படும்.
(தொடர்ச்சி கீழே...)
அப்போது ஜெயலலிதா செய்த பாணியை இப்போது அதிமுக தரப்பினர் கையில் எடுத்துள்ளனர். 2 தினங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் யாகம் நடத்திய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தோப்பு வெங்கடாச்சலம்
ஏனென்றால், அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி சிறை தண்டனை பெற்றதும், அந்த பதவியை பிடிக்கவே தோப்பு வெங்கடாச்சலம் யாகம் நடத்தியதாக ஒரு காரணம் சொல்லப்பட்டது. மதுரை மேயராக இருந்த ராஜன் செல்லப்பா தோப்பு வெங்கடாசலம் அந்த பதவியில் அமர வேண்டும் என்ற விருப்பத்தால், தோப்புக்காக இந்த யாகத்தை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. அக்னி வளர்த்து நடந்த இந்த சிறப்பு யாகம் சுமார் 5 மணி நேரம் நடந்தது.
கேரள நம்பூதிரி
அதேபோல, குற்றாலம், குற்றாலநாதர் சுவாமி கோயிலில் நள்ளிரவு கதவுகளை மூடி ரகசிய யாகம் நடத்தியதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2 நாட்களாக கேரளாவின் கொல்லத்தை நம்பூதிரி ஒருவர் தலைமையில் 4 பேர் வந்து குற்றாலநாதர் கோயிலில் சன்னதி கதவுகளையெல்லாம் மூடி இந்த யாகத்தை நடத்தினார்கள் என்று சொல்லப்படுகிறது.
அறநிலையத்துறை
அந்த யாகங்களின் பெயர் சுதர்ஸன யாகம், பிரத்தியங்கரா யாகம் என்பதாம். அதாவது எதிரிகளை வெல்வதற்காகவும், ஆட்சி அதிகாரத்திற்காகவும் நடத்தப்படுவதுதான் இந்த யாகத்தின் ஸ்பெஷாலிட்டியே!! தமிழக கோயில்கள் எல்லாம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போது, யாருக்கும் தெரியாமல் யாகம் நடத்துவது யார்? எதற்காக இந்த யாகம்? யாருடைய அனுமதி பெற்று நடந்தது என்ற எந்த விவரம் தெரியவில்லை.
ஸ்டாலின் கேள்வி
இது எல்லாவற்றிற்கும் மேலாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை செயலகத்தில் யாகம் நடத்திய புகைச்சல் இன்னும் அடங்கவே இல்லை. கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு சென்றுவிட்டால், அப்போது முதல்வர் பதவி காலியாகும், அதனை கைப்பற்றத்தான் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்துகிறாரா" என்ற ஒரு கேள்வியை ஸ்டாலின் கேட்டார்.
அப்பன் வீட்டு சொத்தா?
அதற்கு, "கரையான் அரிச்சதாலே புதுப்பிச்சோம், சாமிதான் கும்பிட்டோம், யாகம் செய்யவில்லை" என்று தன் தரப்பு விளக்கத்தை அவர் சொன்னாலும், "பூஜையோ, யாகமோ, தலைமை செயலகம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?" என்று ஸ்டாலின் காட்டமாகவும் கேட்டதை நாம் பார்த்தோம்.
கொழுந்து விட்டு எரிகிறது
ஆகமொத்தம், அதிமுக தரப்பில் முக்கியமான தலைகள் பூஜை, யாகம், என இறங்கி விட்டதாக தோன்றுகிறது. இருக்கும் பிரச்சனைகளில் இருந்து தாங்கள் தப்பிப்பதற்காகவா? அல்லது புதிய பொறுப்பு, பதவி வேண்டும் என்பதை முன்னிறுத்தி இந்த யாகங்கள் நடத்தப்பட்டு வருகிறதா அல்லது மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் அல்லது ஆட்சியைப் பிடிப்பவர்களின் மனதில் இடம் பெற்று நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்களா என்று தெரியவில்லை. ஆக மொத்தம் ஆட்சியின் கடைசிக்காலத்தில் யாகங்கள் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளன. நல்லது நடந்தால் சரி.. மக்களுக்கு!
No comments:
Post a Comment