வசந்த காலம் என்றால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் புது கல்வியாண்டின் தொடக்கமாக இருக்கும். ஆனால் யாரவது அமெரிக்கா, ரஷ்யா, ஐஸ்லாந்து அல்லது சிலி போன்ற நாடுகளில் வசிப்பவராக இருந்தால் சில விஷயங்கள் முற்றிலும் மாறானதாக இருக்கும்.
முதலில் சில கேள்விகள்.
எந்த நாட்டில் குழந்தைகள் மற்ற நாட்டினரை ஒப்பிடும்போது பள்ளிக்கு குறைவான காலத்தையே செலவிடுகிறார்கள்?
எந்த நாட்டின் குடும்பத்தினர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களுக்கு அதிகம் செலவு செய்கின்றனர்?
எந்த நாட்டில் ஒருவர் கல்விக்காக தனது வாழ்க்கையில் சராசரியாக 23 வருடங்கள் செலவிடுகிறார் ?
உலகம் முழுவதும் கல்வி முறையில் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள் குறித்த விவரங்கள் இதோ.
27.5 பில்லியன் டாலருக்கு உங்களால் எவ்வளவு பேப்பர் மற்றும் பசை வாங்க முடியும்?
அமெரிக்காவில் சராசரியாக ஒரு குடும்பமானது, குழந்தையின் மழலை கல்வி முதல் மேல்நிலை கல்விப்படிப்பு வரைக்கும் பள்ளிக்கு கொண்டு செல்ல வேண்டிய உபகரணுங்களுக்காக சராசரியாக 685 டாலர்கள் செலவிடுகிறது. 2005-ல் சுமார் 250 டாலராக இருந்த செலவுத்தொகை இப்போது அதிகரித்துள்ளது. 2018 கல்வியாண்டுக்கு மட்டும் அமெரிக்காவில் சுமார் 27.5 பில்லியன் டாலர் இப்பொருட்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.
பல்கலைகழக படிப்புக்கு ஆகும் செலவுகளையும் கருத்தில் கொண்டால் அமெரிக்காவில் இந்த ஆண்டுக்கான செலவு 83பில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் 5.88லட்சம் கோடி ரூபாய். அதிகம் செலவாவது கணினிக்குதான். சராசரியாக ஒவ்வொரு வீடும் சுமார் 299 டாலர் இதற்கு செலவிடுகிறது.
இதற்கு அடுத்தபடியாக துணி மணி செலவுகள் (286 டாலர்), வரைபட்டிகை மற்றும் கால்குலேட்டர் போன்றவற்றுக்கு 271 டாலர்கள் செலவிடப்படுகிறது. புத்தகம், பைண்டிங் செலவு உள்பட மற்ற செலவுகளுக்கு சராசரியாக 112 டாலர்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த செலவு மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
ரஷ்யாவில் பள்ளி நேரம் எவ்வளவு?
33 வளர்ந்த நாடுகளில், ரஷ்யாவில் தான் ஆரம்ப பள்ளி மாணவர்கள் ஒரு வருடத்துக்கு மிகக்குறைவான நேரமே பள்ளியில் செலவிடுகின்றனர்.
சர்வதேச அளவில் ஒரு பள்ளி மாணவர் வருடத்திற்கு 800 மணி நேரம் செலவிடும் நிலையில், ரஷ்யாவில் ஆரம்ப பள்ளி மாணவ மாணவிகள் 500 மணி நேரம் மட்டுமே செலவிடுகின்றனர்.
அதாவது எட்டு மாத கால கல்வியாண்டில் ஒவ்வொரு வகுப்புக்கும் இடையேயான இடைவேளையோடு சேர்த்து ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் மட்டுமே பள்ளியில் செலவிடுகின்றனர். ஆனால் ரஷ்யாவில் கல்வியறிவு விகிதம் கிட்டத்தட்ட 100% என்பதை நினைவில் வையுங்கள்.
டென்மார்க்குக்கு வருவோம். இங்கே ஆரம்பபள்ளி மாணவர்கள் ஒரு வருடத்திற்கு 1000 மணி நேரம் செலவிடுகின்றனர். ரஷ்யாவை விட இரண்டு மாதம் அதிகம் செலவிடுகின்றனர். மேலும் ஒவ்வொரு நாளிலும் அதிக நேரம் பள்ளி வகுப்பில் இருக்கின்றனர். கல்வியில் டென்மார்க் தொடர்ந்து முதல் ஐந்து இடங்களில் இருக்கிறது. நீண்ட கல்வியாண்டின் மூலம் சில பலன்கள் இருப்பதை டென்மார்க் உணர்த்துகிறது.
மலிவான விலையில் கல்வி கற்க வேண்டுமா? ஹாங்காங் பக்கம் போறீங்களா?
வீட்டில் இருந்து பள்ளி எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை பொருத்து மொத்த செலவுகளில் சராசரியாக ஒரு லட்சம் டாலர் அளவுக்கு வித்தியாசம் இருக்கிறது. பள்ளி வகுப்பு கட்டணம், புத்தக செலவு, போக்குவரத்து செலவு, ஆரம்ப கல்வி முதல் இளங்கலை கல்வி வரையிலான தங்குமிட செலவு உள்ளிட்டவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் உலகிலேயே அதிகம் செலவாவது ஹாங்காங் பள்ளிகளில்தான். அரசின் உதவி, கல்வி கடன், உதவித்தொகை இவற்றுக்கெல்லாம் அப்பால் தங்களது குழந்தைகளின் பள்ளி செலவுக்கு தங்கள் கையில் இருந்து சராசரியாக 1.31 லட்சம் டாலர் வரை (92 லட்சம் ரூபாய்) ஹாங்காங்கில் உள்ள பெற்றோர்கள் செலவு செய்கின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இங்கே 99,000 டாலர் செலவு செய்கிறார்கள். அதற்கடுத்தபடியாக சிங்கப்பூரில் 71 ஆயிரம் டாலர் மற்றும் அமெரிக்காவில் 58 ஆயிரம் டாலர் செலவு செய்கிறார்கள். ஆனால் பிரான்சில் பெற்றோர்கள் 16 ஆயிரம் டாலர்கள் மட்டுமே குழந்தை கல்விக்கு செலவு செய்கிறார்கள்.
பெற்றோர்கள் மட்டும்தான் செலவு செய்கிறார்களா?
இது தோற்ற மெய்ம்மை(விர்ச்சுவல் ரியாலிட்டி), 3டி ப்ரின்ட்டிங், ட்ரான்கள் அதிகம் பயன்படுத்தப்படும் காலம். எனினும், உலகம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் பென்சில் பயன்பாடு இன்னும் குறைந்தபாடில்லை.
பென்சில் கண்டுபிடிக்கப்பட்டு 400 வருடங்களான போதிலும் ஒவ்வொரு வருடமும் 15 -20 பில்லியன் பென்சில் உற்பத்தி செய்யப்படுகிறது.
வடமேற்கு பசிபிக்கில் உள்ள சீடர் மரங்கள்தான் பேப்பர் தயாரிக்க பெரும்பாலும் மூல பொருளாக அமைகிறது. சீனா மற்றும் இலங்கையில் கிராஃபைட் அதிகம் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பென்சிலுக்காக 60,000 முதல் 80,000 மரங்கள் வெட்டப்படுகின்றன.
வாழ்வில் நான்கில் ஒரு பங்கை பள்ளியில் செலவழிக்கும் ஆஸ்திரேலிய மாணவர்கள்
ஒரு குறிப்பிட்ட புள்ளியில், பள்ளி வாழ்க்கை முடியவேண்டும். ஆனால் நியூசிலாந்து மற்றும் ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களுக்கு பள்ளி வாழ்க்கை நீடிக்கிறது.
வெவ்வேறு காலகட்டத்தில் ஆரம்ப கல்வி முதல் இளநிலை பட்டபடிப்புக்கான காலம்வரையிலான கட்டத்தில் சராசரியாக மாணவ மாணவிகள் வகுப்புக்குச் செல்லும் காலகட்டத்தை 'பள்ளி வாழ்நாள்' என குறிப்பிடலாம்
ஆரம்ப பள்ளி முதல் பல்கலைகழக படிப்பு வரைக்கும் சுமார் 22.9 ஆண்டுகளை செலவிடுகின்றனர் ஆஸ்திரேலிய மாணவர்கள். அதாவது ஆறு வயதில் இருந்து 28 வயது வரை கல்வி கற்கிறார்கள்.
குறைவான பள்ளி வாழ்நாள் இருப்பது நைஜீரியாவில்தான். அங்கே ஏழு வயதில்தான் ஆரம்ப கல்வி செல்கிறார்கள். நைஜீரிய மாணவர்கள் சராசரியாக 5.3 வருடங்கள் மட்டுமே பள்ளியில் செலவிடுகின்றனர். முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நைஜீரியாவுக்கும் இடையிலான வித்தியாசம் 17 ஆண்டுகள்.
சரி இந்தியாவில் கல்விக்கு பெற்றோர்கள் எவ்வளவு செலவழிக்கிறார்கள்? இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கு பகிரும்பட்சத்தில் உங்களது கருத்தையும் சேர்த்து பகிருங்கள்.
No comments:
Post a Comment