வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மத சடங்குகளுக்காக மாதவிடாயை தள்ளிப் போடுபவரா நீங்கள்?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, September 17, 2018

மத சடங்குகளுக்காக மாதவிடாயை தள்ளிப் போடுபவரா நீங்கள்?



ஆலயம்

"மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக நான் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாத்திரையை போட்டுக் கொண்டு மாதவிலக்கை தள்ளிப்போட்டேன்" என்கிறார் 27 வயது கல்யாணி. இவர் வீடுகளில் வேலை செய்து வாழ்க்கை நடத்துபவர்.

கல்யாணிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கடவுள் பக்தி, பூசை, புனஸ்காரம் என மிகவும் ஆசாரமானவர் கல்யாணியின் மாமியார்.

கல்யாணியின் வீட்டில், அவரைத் தவிர பிற பெண்கள் அனைவருமே கைம்பெண்கள். எனவே, பண்டிகை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் பூஜைக்கான வேலைகளை செய்ய தகுதி படைத்த ஒரே நபராக கருதப்படும் கல்யாணிதான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும்.


இதுபோன்ற சூழலில், கல்யாணிக்கு மாதவிடாய் வந்தால், குடும்பத்தினர், அவரை கடுமையாக கடிந்துக் கொள்வர்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர், மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக மாத்திரையை பயன்படுத்தலாம் என்பது தெரியவந்தபோது கல்யாணிக்கு கிடைக்கும் ஏச்சும் பேச்சும் நின்றுபோனது; ஏனெனில் இயற்கையாக ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மாதவிடாயை அவர் வலுக்கட்டாயமாக நிறுத்த துணிந்துவிட்டார்.
பாரம்பரிய சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் கடைபிடித்தாலும், கல்யாணியின் குடும்பம் மாதவிடாயை தள்ளிப் போடுவதற்கான மாத்திரையை பயன்படுத்துவதற்கு தடை சொல்லவில்லை என்பதைவிட வரப்பிரசாதமாகவே நினைத்தது.






ஆலயம்

ஆனால், பிற நோய்கள் எதுவாயிருந்தாலும், கை வைத்தியத்தையே சிபாரிசு செய்யும் குடும்பங்கள்கூட இந்த மாத்திரைகளை பயன்படுத்த ஊக்குவிப்பது என்பது, வழிபாடு, சடங்குகளின் மீது பொதுமக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையையே வெளிப்படுத்துகிறது.
"தொடர்ந்து சில மாதங்கள் நிறைய பண்டிகைகள் வரும் காலம். ஆசாரமான எங்கள் குடும்பத்தில் குளிக்காமல் ஒரு பொருளை தொடுவது, சமைப்பது, பூஜை செய்வது போன்ற விஷயங்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
அதோடு, நான் வேலை பார்க்கும் வீடுகளிலும், பண்டிகைக் காலங்களில் வேலை அதிகமாக இருந்தாலும், மாதவிடாய் காலத்தில் வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்.

அவர்கள் பார்வையில் அவர்களின் எண்ணம் சரிதான். கடவுள் விசயத்தில் எப்படி பொய் சொல்வது? எனவே இந்த விசயத்தில் நாங்கள் பொய் சொல்லமாட்டோம்.
வேலைக்கு போகாவிட்டால் எனது சம்பளமும் குறையும். எல்லாவிதத்திலும் எனக்கு பிரச்சனை கொடுக்கும் இந்த மாதவிடாயை தவிர்ப்பதற்காக நான் ஏன் மாத்திரையை பயன்படுத்தக்கூடாது?" என்று கேள்வி எழுப்புகிறார் கல்யாணி.






ஆலயம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் பண்டிகைக் காலம், நீண்டுக் கொண்டே செல்லும். தீபாவளிக்கு பிறகு ஒரு மாதம் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் தொடங்கிவிடும்.
"பண்டிகைக் காலங்களில், அதிலும் குறிப்பாக ஆவணி, புரட்டாசி மாதங்களில் பல பெண்கள் மாதவிடாயை தள்ளிப்போடும் மாத்திரையை வாங்கிச் செல்வார்கள். நாளொன்றுக்கு 10-15 அட்டை மாத்திரைகள்", என்கிறார் மருந்துக் கடை வைத்திருக்கும் ராஜூ.
அவரது கருத்துப்படி, நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும் இந்த மாத்திரை அமோகமாக விற்பனையாகிறது.
'மாசு', 'தீட்டு' 'சுத்தமின்மை' போன்ற பல காரணங்களால் பெண்கள் மாதவிடாய் மாத்திரைகளை அதிகளவில் வாங்குகின்றனர்.
இன்னமும் மாதவிடாய் பற்றிய விஷயங்களை வெளிப்படையாக பேசத் தயங்கும் இந்தியாவில் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருப்பது கவலை ஏற்படுத்துகிறது.






மூளைபடத்தின் காப்புரிமைBSIP/GETTY IMAGES

மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு பலவிதமான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தியாவின் பல மாநிலங்களில் இன்றும்கூட பெண்கள் வீட்டின் வெளிப்புறத்தில் ஒதுக்குப்புறமாக தங்கவைக்கப்படுவதும், அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை தனியாக ஒதுக்கி வைத்து யாரும் அதைத் தொடக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நடைமுறைகளும் தொடர்கின்றன.


வீட்டிற்குள் இருக்க நேர்ந்தாலும், அவர்களை தீண்டத்தகாதவர்களாகவே நடத்துவதும், அவர்களுக்கு தட்டு, படுக்கை, போர்வை, தலையணை எல்லாம் தனியாக கொடுத்து, ஒதுக்கி வைத்துவிட்டு, மாதவிடாய் முடிந்ததும் வீட்டை சுத்தம் செய்து அவர்கள் பயன்படுத்திய பொருட்களை புனிதப்படுத்துவதையும் மறுக்க முடியாது.
மாதவிடாய் சமயத்தில் பண்டிகைக் காலத்தில் பூசைகளில் கலந்துக் கொள்வதற்கு பெண்களுக்கு தடை விதிக்கப்படுகிறது, அந்த சமயத்தில் அவர்கள் கோயில்களுக்குள் செல்ல முடியாது.






பெண்கள்படத்தின் காப்புரிமைPRAKASH MATHEMA/AFP/GETTY IMAGES

இந்த மாத்திரைகளை உட்கொண்டால் பக்க விளைவுகள் உண்டா?


"இந்த மாத்திரைகளை வாங்குவதற்காக வரும் பெண்கள், மருத்துவரின் பரிந்துரை சீட்டு கொண்டு வருவதில்லை. பொதுவாக இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதற்கு மருத்துவரை ஆலோசிப்பதும் இல்லை. மூன்று மாத்திரைகள் சாப்பிட்டாலே மாதவிடாய் தள்ளிப்போகும் என்றாலும், ரிஸ்க் எடுக்க விரும்பாமல் ஏழு அல்லது எட்டு மாத்திரைகளை பெண்கள் பயன்படுத்துகிறார்கள்" என்கிறார் ராஜூ.
இந்த மாத்திரைகளை உட்கொண்டால் பக்க விளைவுகள் உண்டா? என்ற கேள்விக்கு, இந்த மாத்திரைகளை உட்கொள்வதற்கு எந்தவொரு மருத்துவரும் பரிந்துரைக்க மாட்டார்கள் என்கிறார், சஹயாத்ரி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் கெளரி பிம்ப்ரால்கர்.
"மாதவிடாய் சுழற்சியானது பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் என்ற இரண்டு ஹார்மோன்களை சார்ந்தது.
மாதவிடாயை தாமதப்படுத்துவதற்கு இந்த ஹார்மோன் மாத்திரைகளை எடுக்க வேண்டும். அதாவது, இந்த மாத்திரைகள் உங்கள் ஹார்மோன் சுழற்சியை மாற்றுகின்றது என்பதுதானே பொருள்? "
"இந்த ஹார்மோன் மருந்தை தொடர்ந்து பயன்படுத்தினால், மூளை செயலிழப்பு, பக்கவாதம், வலிப்பு நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
இதுபோன்ற பல பெண்களை நான் பார்க்கிறேன். 10-15 நாட்களுக்கு மாதவிடாயை தாமதப்படுத்துவதற்காக பெண்கள் அதிக அளவிலான மருந்தை உட்கொள்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது" என்கிறார் மருத்துவர் கெளரி.







மாத்திரைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

யார் இந்த மாத்திரைகளை பயன்படுத்தக்கூடாது?

மாதவிடாயை தள்ளிப்போடுவதற்கு மாத்திரை எடுத்துக் கொள்ளும் பெண்கள் மருத்துவரை ஆலோசனை செய்வதேயில்லை. "மருந்துக்கடைகளில் எளிதாக இந்த மாத்திரைகள் கிடைப்பதால், தேவையில்லை என்றாலும் அற்ப காரணங்களுக்காகவும், இதன் கடுமையான விளைவுகளை தெரிந்துக் கொள்ளாமல் பெண்கள் பயன்படுத்துகிறார்கள்”. என்கிறார் மருத்துவர் கெளரி.
இந்த மருந்தை எடுத்துக் கொள்வதற்கு முன், அந்த பெண்ணின் மருத்துவ பின்னணியையும் கணக்கில் கொள்ள வேண்டும். தலைவலி, ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்களும், பருமனான பெண்களும் கண்டிப்பாக இந்த மருந்தை பயன்படுத்தக்கூடாது.

விளையாட்டு வீராங்கனைகளின் நிலை என்ன?

விளையாட்டுப் போட்டிகளின்போது மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக வீராங்கனைகள் இந்த மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள். இது அவர்களின் உடல்நலனை பாதிக்காதா?







பெண்கள்

"விளையாட்டு வீராங்கனைகளின் நிலையே வேறு. அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டும், சத்தான உணவை உட்கொண்டும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.
எனவே அவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகிறது. அதுமட்டுமல்ல, அவர்கள் தொடர்ந்து இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதில்லை.
ஆனால் மத நம்பிக்கைகளுக்காக இந்த மாத்திரைகளை பயன்படுத்தும் பெண்களின் நிலையும், உடல் ஆரோக்கியமும் வேறு," என்கிறார் கெளரி.

'மாதவிடாயின் போதும், நான் விநாயகர் பூசைகளை செய்கிறேன்'

மாதவிடாய் காலத்தில் வீட்டிற்கு வெளியே தள்ளப்படும் பெண்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் கிராமங்களில் அதிகம் என்பதோடு, மத நம்பிக்கைகளுக்காக மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக மாத்திரைகளை சாப்பிடுவர்களின் எண்ணிக்கையும் கிராமங்களில் அதிகமாகவே இருக்கிறது.






அம்மன்

"மாதவிடாய் காலத்தில் பூஜை செய்யாதே என்றோ அல்லது மத வழிபாடுகளை செய்யக்கூடாது என்றோ சொல்லவில்லை. எனவே மூட நம்பிக்கையின் அடிப்படையில் பெண்கள் தங்கள் உடலை வருத்திக் கொண்டு, ஆபத்துக்கு உட்படுத்திக் கொள்ளக்கூடாது" என்கிறார் மருத்துவர் கெளரி.


ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட பிறகு பிரபலமான திருப்தி தேசாய் என்பவரும் மருத்துவர் கெளரியின் கருத்தையே வழிமொழிகிறார்.
"மாதவிடாய் என்பது தீட்டோ, தீண்டத்தகாததோ அல்ல. இதை ஓர் இயல்பான நிகழ்வான ஏற்றுக் கொள்ளவேண்டும். மத நம்பிக்கைகளுக்காகவும், சடங்குகளுக்காகவும் அதை தள்ளிப்போடுவது முற்றிலும் தவறானது.
எனக்கு மத நம்பிக்கை இருக்கிறது, மாதவிடாய் ஏற்படும்போதும் நான் கோயில்களுக்கு செல்கிறேன், மாதவிடாயை காரணம்காட்டி எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ளமுடியாது என்று நான் சொல்லமாட்டேன். மாதவிடாய் என்றாலே தீட்டு, மாசு என்ற எண்ணத்தை மாற்றவேண்டும்" என்கிறார் திருப்தி தேசாய்.






ஆலயம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தர்மசாத்திரங்களில் எங்குமே மாதவிடாயை தீட்டு என்று குறிப்பிடவேயில்லை என்று கூறுகிறார் பஞ்சாங்கம் எழுதும் டி.கே.சோமன்.
"பழங்காலத்தில் மாதவிடாயின்போது பெண்கள் வீட்டின் மூலையில் தனியாக அமர வைக்கப்பட்டதற்கு காரணம் அவர்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காகவும், ஒட்டு மொத்தமாக சுகாதாரத்தை மேம்படுத்தவும்தான். இன்றைய சூழலில் அதற்கான தேவையில்லை.
இன்று பெண்கள் தனியாகவும் வசிக்கும் நிலையில், தெய்வத்திற்கு உணவு படைக்க வேண்டும் என்றால் அதை யார் சமைப்பார்கள்?
அந்த பெண்ணே செய்யலாம்… கடவுளுக்கு படைக்கும்போது அந்த உணவில் துளசி அல்லது தர்பைப்புல்லை போடுவோம். எனவே அதில் பாதகமில்லை. அதேபோல் மாதவிடாய் காலத்தில் பெண்கள் வழிபாடுகள் செய்யலாம்" என்கிறார் சோமன்.

"கடவுள் என்பவர் மனிதர்கள் மீது கோபம் கொள்வதில்லை என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும். எனவே தவறான புரிதலால் பெண்கள் மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக மாத்திரைகளை பயன்படுத்தி உடலை கெடுத்துக் கொள்ளக்கூடாது" என்கிறார் சோமன்.






ஆலயம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தனியார் நிறுவனம் ஒன்றில் உயர்நிலை பொறுப்பு வகிக்கும் மேகா என்ற பெண், தான் பல முறை மத ரீதியிலான காரணங்களுக்காக மாத்திரைகளை பயன்படுத்தியிருப்பதாகவும், ஆனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்பட்டதில்லை என்றும் கூறுகிறார்.
"மாதவிடாய் காலத்தில் பெண்கள் பூஜை செய்யக்கூடாது என்ற கருத்து எனக்கும் ஏற்புடையதல்ல. ஆனால், என் மாமியாருக்கு அந்த நம்பிக்கை இருப்பதால், அவரின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தே நான் மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
சில நாட்களுக்கு முன்னர் குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் அந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டேன்" என்கிறார் மேகா.
மாதவிடாயை தள்ளிப்போடும் மாத்திரைகள் பக்கவிளைவை ஏற்படுத்துமா இல்லையா என்பது விவாதத்தின் பிரதான கருப்பொருள் அல்ல. ஆனால், தங்களது ஆரோக்கியத்தை பணயம் வைத்து பெண்கள் மத ரீதியிலான மூட நம்பிக்கைகளை பின்பற்ற வேண்டுமா என்பதே நம் முன் இருக்கும் பிரம்மாண்டமான சவால்!

No comments:

Post a Comment