ஒரு வேலையை தள்ளிபோடுவதா அல்லது உடனடியாக செய்து முடிப்பதா என்பது உங்களது மூளை எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து அமைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஒரு குறிப்பிட்ட வேலையை நாம் உடனடியாக செய்வதையும் அல்லது தொடர்ந்து பலமுறை வேண்டுமென்றே தள்ளிபோடுவதையும் நமது மூளையிலுள்ள இரண்டு பகுதிகள் தீர்மானிக்கின்றன என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
264 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பு மற்றும் மூளைகளின் ஸ்கேன்களை கொண்டு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு விடயத்தை உடனே முடிப்பதும், தள்ளிப்போடுவதும் ஒருவரது நேர மேலாண்மையைவிட உணர்ச்சியை கட்டுப்படுத்துவதை பொறுத்து அமைவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரிய துப்பு
ஒருவரது உணர்ச்சி மற்றும் ஊக்கத்தை கட்டுப்படுத்தும் வேலைகளை மேற்கொள்ளும் மூளையிலுள்ள அமிக்டாலா என்னும் பாதாம் கொட்டை வடிவிலான பகுதி பெரியதாக உள்ளவர்களே வேலையை தள்ளிப்போடுவது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற அமைப்பை பெற்றுள்ளவர்களின் அமிக்டாலாவுக்கும், மூளையின் மற்றொரு பகுதியான டொர்சல் அன்டெரியர் சிங்குலேட் கோர்டேஸுக்கும் (டிஏசிசி) இடையிலான பிணைப்பு சரியாக இருக்காததும் மற்றொரு காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அமிக்டாலா அளிக்கும் தகவல்களை பெறும் டிஏசிசிதான் உடல் எவ்விதமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. ஒருவரது உணர்ச்சி, கவனச்சிதறலை தடுப்பதன் மூலம் அந்த நபரை சரியான பாதையில் வைத்திருக்க இது உதவுகிறது.
"பெரிய அமிக்டாலாவைக் கொண்ட நபர்கள் ஒரு நடவடிக்கையின் எதிர்மறையான விளைவுகளைப் பற்றி அதிகம் ஆர்வமாக இருப்பதுடன், ஒரு விடயத்தை செய்வதற்கு தயங்குவதுடன், அதை கிடப்பில் போடுகிறார்கள்" என்று கூறுகிறார் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட குழுவில் இடம்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரான ருஹ்ர் பல்கலைக்கழக பேராசிரியர் எர்ஹன் ஜின்க்.
ஒரு வேலையை திறனுடன் உடனடியாக செய்து முடிப்பவர்களை விட, அதை தள்ளிப்போடுபவர்களின் மூளையிலுள்ள அமிக்டாலா - டிஏசிசி இடையிலான பிணைப்பு மோசமாக உள்ளதே காரணமே என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மூளையை கட்டுப்படுத்துங்கள்
இதுகுறித்து கடந்த ஒரு தசாப்தகாலத்திற்கும் கனடாவின் ஒட்டாவாவிலுள்ள கார்லெட்டோன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டிம் பிய்ச்சில், ஒரு விடயத்தை உடனே முடிப்பதும், தள்ளிப்போடுவதும் ஒருவரது நேர மேலாண்மையைவிட உணர்ச்சியை கட்டுப்படுத்துவதை பொறுத்து அமைவதாக நம்புகிறார்.
"இந்த ஆராய்ச்சி மூளை உணர்ச்சி மையங்கள் ஒரு நபரின் சுய கட்டுப்பாட்டு திறனை எப்படி மூழ்கடிக்கிறது என்பதை காட்டுகிறது" என்று அவர் கூறுகிறார்.
முறையான தியானம் மற்றும் கட்டுப்பாடுகளின் மூலம் அமிக்டாலா அளவை குறைத்து, அமிக்டாலா - டிஏசிசி இடையிலான பிணைப்பை உறுதியாக்குவது சாத்தியமானது என்பதை இதற்கு முந்தைய ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.
வேலையை தள்ளிப்போடுபவர்களுக்கான குறிப்புகள்
நம்மை நாமே ஊக்கப்படுத்தும் வழிகளை பின்பற்றுவதன் மூலம் தினசரி வாழ்க்கையில் மாற்றத்தை காண முடியுமென்று கூறுகிறார்.
அவரது சில குறிப்புகள்:
உங்களுக்குள்ள வேலை ஒன்றிற்கு குறிப்பிட்ட காலக்கெடு இல்லையென்றால், அதை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்.
நீங்கள் செய்யவேண்டிய விடயங்களை அப்படியே எழுதாமல், சிறுசிறு வேலைகளாக பிரித்து குறித்துக்கொள்ளுங்கள். இது வேலைகளை குழப்பமின்றி, எளிதாக மேற்கொள்வதற்கு உதவும்.
உங்களது அலைபேசி/ கணினியில் வரும் அறிவிப்புகளை (நோட்டிபிகேஷன்) ரத்து செய்துவிடுவதன் மூலம் தேவையற்ற கவனச்சிதறல்களை தவிர்க்க முடியும்.
"பிஸியாக" இருப்பது நாம் செய்ய தவிர்க்கும் காரியத்தை செய்வதைவிட எளிமையானது. எதற்கெடுத்தாலும் உங்களுக்கு நேரமில்லை என்று கூறுவதை விடுத்து, உங்களுக்கு இருக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்துகிறீர்களா என்பது குறித்து சுய ஆய்வொன்றை மேற்கொள்ளுங்களேன்!
No comments:
Post a Comment