செங்கல்பட்டு அருகே பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக
விடுதியில் மாணவி, மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து மறைமலைநகர்
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சனிக்கிழமை அனுப்பிரியா என்ற மூன்றாம் ஆண்டு மாணவியும், ஜார்க்கண்ட்
மாநிலத்தை சார்ந்த அனுஷ் செளத்ரி என்ற முதலாம் ஆண்டு மாணவரும் அடுத்தடுத்து
தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி
உள்ளது.
அனுப்பிரியா என்ற மாணவி எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பிடெக் பயோமெடிக்கல்
இன்ஜினியரிங் படித்து வந்தார். சனிக்கிழமையன்று விடுதியின் பத்தாவது
மாடிக்கு சென்ற அந்த மாணவி அங்கிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
மேலிருந்து குதித்து விழுந்ததில் அந்த மாணவியின் உடல் சிதறிப்போனது.
இப்படி ஒரு கோரமான முடிவுக்கு என்ன காரணம் என்று காவல்துறையினர் விசாரித்து
வந்த நிலையில் தற்கொலைக்கு முன்பாக அந்த மாணவி எழுதிய கடிதம் கிடைத்தது.
தற்கொலைக்கு என்ன காரணம்
மரணத்திற்கு முன்பாக அனுப்பிரியா, தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்று
கடிதம் எழுதி வைத்துள்ளார். வீட்டில் எனக்கு சுதந்திரமில்லை, டிவி
பார்க்கக் கூடாது, சினிமா பார்க்கக்கூடாது என்று பெற்றோர் கண்டிப்பாக
இருந்தனர். என்னை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
சுதந்திரமாக வாழ முடியவில்லை
என்னால் என்னுடைய வாழ்க்கையை சுதந்திரமாக வாழ முடியவில்லை வீட்டுக்கு
போகவும் பிடிக்கவில்லை. போலியான வாழ்க்கையை என்னால் வாழ முடியவில்லை
என்பதால் தற்கொலை செய்யப்போவதாக எழுதி வைத்துள்ளார். தம்பி ராஜூ சுந்தரம்
சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் அந்த கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோர் உறுதி
அனுப்பிரியாவின் மரணம் குறித்து கேள்விப்பட்ட உடன் பெற்றோரும், தம்பி
ராஜூவும் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர்.
அனுப்பிரியாவின் தம்பி சென்னை ஐஐடிவியில் படித்து வருகிறார். பெற்றோரின்
கண்டிப்பு மாணவியின் உயிரை குடித்துள்ளது.
ஜார்கண்ட் மாணவர் தற்கொலை
மாணவியின் தற்கொலை சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குள் இன்றைய தினம் ஜார்கண்ட்
மாநிலத்தைச் சேர்ந்த அனுஷ் சௌத்ரி என்ற மாணவர் 2வது மாடியில் இருந்து
குதித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர்
காவல்துறையினர் அனுஷ் சௌத்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி
வைத்தனர். இரண்டு நாட்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எஸ்ஆர்எம்
பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment