உத்தரப் பிரதேசத்தில் போலீஸ் நிலையத்தில் பறிமுதல் செய்து
வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராயத்தை எலிகள் குடித்து தீர்த்த சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பெரேய்லி மாவட்டம் மல்காமாவில் உள்ளது
கண்டோண்மென்ட் போலீஸ் நிலையம். இந்தப் பகுதியில் கள்ளச் சாராய நடமாட்டம்
அதிகம் என்பதால் அடிக்கடி சோதனை நடத்தி, அவற்றைப் பறிமுதல் செய்து வந்தனர்
போலீசார்.
(தொடர்ச்சி கீழே...)
வழக்கு விசாரணைகளின் போது தேவைப்படும் என்பதால், இவ்வாறு கடந்த 10 ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1000 லிட்டர் சாராயத்தை போலீஸ் நிலையத்தில் பிளாஸ்டிக் கேன்களில் வைத்திருந்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட அந்த போலீஸ் நிலையத்திற்கு தலைமை குமாஸ்தாவாக நரேஷ்பால் என்பவர் புதிதாக நியமிக்கப்பட்டார். அவர் போலீஸ் நிலையத்தில் உள்ள பொருட்கள் இருப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
அதிர்ச்சி:
அப்போது பதிவேட்டில் சாராயம் இருப்பு பற்றிய குறிப்பு இருந்தது. ஆனால், சாராய கேன்கள் அனைத்தும் காலியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது மேலதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
எலிகள் தான் காரணம்:
மேற்கொண்டு இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், போலீஸ் நிலையத்தில் உள்ள எலிகள் அந்த 1000 லிட்டர் சாராயத்தையும் குடித்து விட்டதாகவும், சில கேன்கள் ஓட்டையாகி சாராயம் ஒழுகி விட்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
உறுதி:
இது சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநந்தன்சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும், போலீஸ் நிலைய பகுதியில் நடமாடிய அனைத்து எலிகளையும் பிடித்து விட்டதாகவும், இனி எலிகள் உள்ளே வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு கால் எலிகளா?
எலிகள் 1000 லிட்டர் சாராயத்தையும் குடித்து விட்டதாக போலீசார் கூறியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே அவ்வளவு சாராயத்தையும் நான்கு கால் எலிகள் தான் குடித்ததா, இல்லை இரண்டு கால் போலீஸ் எலிகள் குடித்ததா என அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
புதிதல்ல:
ஆனால் இப்படி மதுவை எலி குடித்து விட்டதாக போலீசார் கூறுவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் இதேபோல், பீகார் மாநிலம் மைமூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஸ்டோர் ரூமில் வைத்திருந்த 200 லிட்டர் மதுவை எலிகள் குடித்துவிட்டதாக போலீசார் கணக்குக் காட்டியது நினைவுக் கூரத்தக்கது.
No comments:
Post a Comment