வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அஜித் குமார் (நடிகர்) பற்றி என்ன தெரியும் உங்களுக்கு.? - Thala Ajith
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 25, 2018

அஜித் குமார் (நடிகர்) பற்றி என்ன தெரியும் உங்களுக்கு.? - Thala Ajith

 

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள்.


தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகையாக வளர்ந்து, அவர் நடித்த ‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த பேபி ஷாலினியை மணமுடித்தார்.


மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளையும்’, இரண்டு முறை ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும்’, மூன்று முறை ‘விஜய் விருதுகளையும்’, இரண்டு முறை ‘தமிழ்நாடு மாநில அரசு விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், ஒரு கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார். இத்தகைய சிறப்புமிக்க ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜீத் குமார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்த் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

பிறப்பு: மே 11971
பிறப்பிடம்: ஹைதராபாத்,ஆந்திர பிரதேசம், இந்தியா
பணி: நடிகர், கார் பந்தய வீரர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
அஜீத் குமார் அவர்கள், இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், பாலக்காடு தமிழ் ஐயரான சுப்ரமணியம் என்பவருக்கும், கொல்கத்தா சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது அண்ணனான அனூப் குமார் நியூயார்க்கில் பங்குத்தரகராகவும், அவரது தம்பியான அணில் குமார் சியாட்டலில் பணிபுரிகிறார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
என்னதான் பாலக்காடு வழி தந்தைக்கும், சிந்தி தாய்க்கும் மகனாக, ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும், அஜீத் குமார் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் வளர்ந்தார். சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் இருக்கும் ஆசான் மெமோரியல் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கிய அவர், படிப்பின் மீது பற்றற்றவராகவே காணப்பட்டார். இதனால், 1986ல் தனது உயர்நிலைக் கல்வியைத் தொடங்குவதற்கு முன்பே, பெற்றோர்களின் விருப்பத்தையும் எதிர்த்துத் தனது பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார்.

ஆரம்பகாலப் பணிகள்
தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே கைவிட்ட அவர், ஒரு இரு சக்கர பைக் மெக்கானிக்காகப் பணியில் சேர்ந்தார். பைக், கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டிய அவர், தானாகவே அவற்றை ஓட்ட கற்றுக்கொண்டு, அதற்கான உரிமத்தையும் பெற்றார். பைக் பந்தயம் தான் தனது தொழில் பாதை என்று தேர்ந்தெடுத்த அவர், அதில் கலந்து கொள்ளப் பணம் வேண்டுமென்பதால், அவ்வப்போது, சிறு சிறு பத்திரிக்கை விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார். பைக் பந்தயத்தின் போது ஏற்பட்ட காயத்தினால், அவரைப் பல வணிக முகவர்கள் அச்சு ஊடகங்களின் விளம்பரங்களில் நடிக்க வைக்க அவரைத் தூண்டினர். இதனால், அவருக்குப் பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது. ‘பந்தயமா? சினிமாவா?’ என்று வந்த போது, அவர் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தினால், சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

திரையுலக வாழ்க்கை
1991ல், தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான அஜீத் குமார் அவர்கள், அப்படத்தின் இயக்குனர் மரணமடைந்ததால், அதில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பின்னர், ஓர் ஆண்டுகள் கழித்து, 1992ல் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும், அப்படம் அவருக்கு ‘சிறந்த புதுமுகத்திற்கான விருதைப்’ பெற்றுத்தந்தது. அதே ஆண்டில், செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவே, தமிழ்த் திரையுலகில் அவரது முதல் படமாகும். இதைத் தொடர்ந்து, அவர், ‘பாசமலர்கள்’ (1994), ‘பவித்ரா’ (1994), ‘ராஜாவின் பார்வையிலே’ (1995), ‘ஆசை’ (1995) போன்ற படங்களில் நடித்தார். இதில், 1995ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்த் திரையுலகில், ‘வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற அந்தஸ்த்தையும் பெற்றுத் தந்தது.

தனது இயல்பான மற்றும் இயற்கையான நடிப்பில் ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற அஜீத் குமார் அவர்கள், தொடர்ந்து ‘வான்மதி’ (1996), ‘கல்லூரி வாசல்’ (1996), ‘மைனர் மாப்பிள்ளை’ (1996), ‘காதல் கோட்டை’ (1996), ‘நேசம்’ (1997), ‘ராசி’ (1997), ‘உல்லாசம்’ (1997), ‘பகைவன்’ (1997), ‘ரெட்டை ஜடை வயசு’ (1997), ‘காதல் மன்னன்’ (1998), ‘அவள் வருவாளா’ (1998), ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ (கௌரவ வேடம்) (1998), ‘உயிரோடு உயிராக’ (1998), ‘தொடரும்’ (1999), ‘உன்னை தேடி’ (1999), ‘வாலி’ (1999), ‘ஆனந்த பூங்காற்றே’ (1999), ‘நீ வருவாய் என’ (கௌரவ வேடம்) (1999), ‘அமர்க்களம்’ (1999), ‘முகவரி’ (2000), ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ (2000), ‘உன்னை கொடு என்னை தருவேன்’ (2000), ‘தீனா’ (2001), ‘சிட்டிசன்’ (2001), ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001), ‘அசோகா’ (கௌரவ வேடம்) (2001), ‘ரெட்’ (2002), ‘ராஜா’ (2002), ‘வில்லன்’ (2002), ‘என்னை தாலாட்ட வருவாளா’ (கௌரவ வேடம்) (2003), ‘ஆஞ்சநேயா’ (2003), ‘ஜனா’ (2004), ‘அட்டகாசம்’ (2004), ‘ஜீ’ (2005), ‘பரமசிவன்’ (2006), ‘திருப்பதி’ (2006), ‘வரலாறு’ (2006), ‘ஆழ்வார்’ (2007), ‘கிரீடம்’ (2007), ‘பில்லா 2007’ (2007), ‘ஏகன்’ (2008), ‘அசல்’ (2010), ‘மங்காத்தா’ (2011), ‘பில்லா 2’ (2012), ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ (2012) போன்ற படங்களில் நடித்து தனக்கென ஓர் இடத்தைத் தமிழ்த் திரையுலகில் தக்கவைத்துக் கொண்டார்.

பந்தய வாழ்க்கை
தனது இளமைப் பருவத்திலிருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த அவர், மும்பை, சென்னை, தில்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அரங்கில் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களுள் ஒருவர் என்றும், ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகரென்ற பெருமையைப் பெற்றார். ஜெர்மனி, மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்ட அவர், 2003 ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். அது மட்டுமல்லாமல், 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இல்லற வாழ்க்கை
1999 ஆம் ஆண்டில், சரணின் ‘அமர்க்களம்’ என்ற படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார். ஷாலினியும் இதற்கு ஒப்புக்கொண்டதால், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2௦௦௦ ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்களது திருமணத்திற்குப் பின்னர், தனது திரையுலக வாழ்வில் இருந்து ஓய்வுபெற்றார் ஷாலினி. அவர்களுக்கு, ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டில் அனோஸ்கா என்ற மகள் பிறந்தாள்.

விருதுகள்
  • 2௦௦1 – தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருதை ‘பூவெல்லாம் உன் வாசம்’ என்ற படத்திற்காக வென்றார்.
  • 2006 – தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட விருதை, ‘வரலாறு’ படத்திற்காக வென்றார்.
  • விஜய் விருதுகளை 2௦௦6ல் ‘வரலாறு’, 2011ல் மங்காத்தா படத்திற்காக இரண்டு முறையும் பெற்றார்.
  • சிறந்த தமிழ் நடிகருக்கான ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதை’, 1999ல் ‘வாலி’ படத்திற்காகவும், 2௦௦1ல் ‘சிட்டிசன்’ படத்திற்காகவும் வென்றார்.
  • சிறந்த தமிழ் நடிகருக்கான ‘சென்னை டைம்ஸ் விருதை’, ‘மங்காத்தா’ படத்திற்காக 2011 ஆம் ஆண்டில் பெற்றார்.
  • ஃபிலிம்ஃபேர் விருதுகள் 1999ல் ‘வாலி’ படத்திற்காகவும், 2002ல் ‘வில்லன்’ படத்திற்காகவும், 2006ல் ‘வரலாறு’ படத்திற்காகவும், 2௦௦7ல் ‘பில்லா’ படத்திற்காகவும் அவருக்கு வழங்கப்பட்டது.

காலவரிசை
1971: ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், சுப்ரமணியம் என்பவருக்கும், மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார்.
1986: உயர்நிலைக் கல்வியைத் தொடங்குவதற்கு முன்பே, தனது பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார்.
1991: தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமானார்.
1992: ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.
1992: செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ என்ற படம் மூலமாகத் தமிழ் திரையுலகில் கால்பதித்தார்.
1999: ‘அமர்க்களம்’ படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார்.
2௦௦௦: இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2௦௦௦ ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர்.
2௦௦1: தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருதை ‘பூவெல்லாம் உன் வாசம்’ என்ற படத்திற்காக வென்றார்.
2003: ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார்.
2006: தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட விருதை, ‘வரலாறு’ படத்திற்காக வென்றார்.
2008: ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டில் அனோஸ்கா என்ற மகள் பிறந்தாள்.
2010: ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்டார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment